மகாமகம்
மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாகத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரு ‘திருவிழா’ கொண்டாடப்படுகிறது. அதுபற்றி எல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவ புண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம், ஸ்தலம், மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு, கடையர்களாய், மடையர்களாய் ஆக்கப்படுகின்றார்கள்? என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
குளம் என்பது ஒரு சாதாரணத் தெப்பக்குளம். தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் மழை பெய்வதனால் ஏற்படும் வெள்ளங் களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் ஓடை அல்லது நீர்ப்போக்காகும். ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்து வந்து தேக்கி இருப்பதுதான். மற்றக் குட்டித் தீர்த்தம் என்பதும், கிணற்றுத் தண்ணீர் ஊற்றம் போன்ற ஊற்றாகும்.
மேலும், அந்த கும்பகோணம் மகாமகக் குளத்தில் (மாமாங்கக் குளத்தில்) வடக்கில் ஏழு தீர்த்தங்களும், கிழக்கில் நான்கு தீர்த்தங்களும், நடுமத்தியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் உள்ளதாகவும், ஆக இந்த மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் அந்தப் புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது. இந்த விஷயம் எவ்வளவு நகைக்கத் தகுந்த விஷயம்? இதை எழுதியவன் எவ்வளவு அயோக்கியன்? அல்லது எவ்வளவு முட்டாள்? என்பது அல்ல நமது கேள்வி! இதைப் படித்துப் பார்த்து அதன்படி நம்பி நம் மக்கள் நடப்பார்கள் என்று நம் மக்களை எவ்வளவு முட்டாள்களாகவும், அடி வண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வி!
மேலும், கும்பகோணம் ஸ்தல புராணத்தைப் பார்த்தைக் கீழே குறிப்பிடுகின்றோம்!
கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும், ஒன்பது கன்னிகளாக வெளிவந்து வெள்ளியங்கிரிக்குச் சென்று பரமசிவனை அடைந்து, “உலகிலுள்ள மக்கள் எல்லோரும் கொடிய பாவங்களைச் செய்து விட்டு, தங்களைப் பாவங்களிலிருந்து மீட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களின் பாவங்களைச் சுமப்பதை எப்படி போக்கிக் கொள்வது?” என்றதும், சிவன் “கும்பகோணத்திலே தென்கிழக்கில் ஒரு தீர்த்தம் உண்டு. அங்கே பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதம் மகாமக நாளன்று குளிப்பீர்களானால், உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்” என்றதும், “கும்பகோணம் எங்கே உள்ளது?” என்று கன்னியர்கள் கேட்டார்களாம்! அதற்குச் சிவன், “நீங்கள் எல்லோரும் காசிக்குப் போங்கள்; அங்கே வந்து நான் விக்னேஸ்வரன் எனும் பெயரில் அழைத்துப் போகின்றேன்” என்று சொல்லி காசியில் இருந்து கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்று குளத்தில் அவர்களை குளிக்கச் செய்து, பிறகு சிவனும் அந்தக் கன்னியர்களும் அங்கேயே கோவில் கொண்டு விட்டார்கள்.
அந்தக் குளத்தில் குளிப்பவர்களுக்கு சர்வ பாவமும் தொலைந்து புண்ணியம் உண்டாகி, சர்வ மங்களமும் உண்டாகும் என அப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குளத்தில் எப்படிக் குளிப்பது? அதற்காகப் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது? எந்தெந்த இடத்தில் எந்தெந்த சாமியை எப்படியெப்படி வணங்குவது? என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதையை ஆதாரமாக வைத்து, இந்த மகாமக உற்சவத்திற்கு எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், விளம்பரங்கள், பணச் செலவுகள், கஷ்டங்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
அடுத்து, பாவமுள்ள மனிதர்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள நதிகளில் ஸ்நானம் செய்தால் நதிகளுக்குப் பாவங்கள் ஒட்டிக் கொண்டது என்பதில் அறிவோ, உண்மையோ உள்ளதா? மேலும் அந்தப் பாவத்தைத் தொலைக்க நதிகள் மகாமகத் தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதனால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என யோசியுங்கள்.
இத்தனைப் பாவங்களையும் தீர்த்துத் தன்னிடம் பெற்றுக் கொண்ட மகாமகக் குளம் எந்த உருவில், எங்குப் போய் தன் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதை யோசித்தால் கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!
நூல் : இந்துமதப் பண்டிகைகள்
ஆசிரியர் : தந்தை பெரியார்
Comments
Post a Comment