சிலை வணக்கத்தால் சீரழியும் நாடு: இந்து மதத்தைத் தழுவிய கிரேக்க மாதின் எடுத்துக்காட்டு



இந்து மதத்தைத் தழுவிச் சாவித்திரி தேவி என்று மாற்றுப் பெயர் வைத்துக்கொண்ட கிரேக்க மாது, இந்துக்களுக்கு எச்சரிக்கை என்று தலைப்பிட்டு எழுதியுள்ள புத்தகத்தில் அபாய அறிகுறி என்ற அத்தியாயத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களாவன:

ஆரியச் சிலை வணக்கத்துறையின் இறுதிக்கோட்டை - இந்த இந்தியா. ஆனால், இந்த இந்தியாவில் இந்த இந்துத்வம் இனியும் எத்தனைக் காலம் உயிர்பற்றி நிற்கப் போகிறதோ!

கோயில்கள் நிறைந்த தென்னாட்டிலேயே இந்தக் கேள்வி வியப்பளிக்கலாம். கோயில்கள் இருக்கும்வரை இந்துமதம் இருக்குமென்பது அவர்களுடைய எண்ணம். ஆனால், ஆரிய கலாச்சாரத்தின் தாயகமான வங்காளத்திலும் இந்து மதச் செல்வாக்கு பெரும் அளவுக்கு கரைந்துவிட்டது.

மேற்கு பஞ்சாபில் ஓரளவுக்கு சீக்கியர்கள் இருந்தாலும் முஸ்லிம் மதத்தினர்கள் அதிகம். வங்காளத்திலோ ஒரு இந்துவைக்கூட கண்ணில் காணாது பலகாத தூரம் பிரயாணம் செய்யலாம்.

(ஒரு சில பண லேவாதேவிக்காரர்களும் வியாபாரிகளும் தவிர்த்து மற்றெல்லோரும் முஸ்லிம்களே. கிழக்கு வங்கத்தில் மிகவும் அதிகம்) பார்ப்பன பண்டிதர்களுக்கோ தங்கள் கிராம சுற்று வட்டாரத்தைத் தவிர்த்து மற்றபடி பரந்த உலகறிவு கிடையாது. இந்துக்கள் பரம்பரைப் பழக்க வழக்கங்கள், ஹிந்து கலாச்சாரம் என்பனவெல்லாம் உயர்சாதி இந்துக்கள் என்பவர்களின் வீட்டுக்குள்தான் இருக்கின்றன. தாழ்ந்த சாதி இந்துக்கள் என்போர் மதம் மாறிவிட்டனர். இப்போதும் மதம் மாறி வருகின்றனர்.

இந்துமதம் தெய்வீகம், சாகாதது என்ற பழைய பாடமெல்லாம் இப்போது பொய்யாகி வருகிறது. ஏனெனில் அந்நிய மதங்களின் ஆதிக்கம் இங்கு வலுத்து வருகிறது. இந்து மதத்தை ஆதரிப்போர் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். பலர் மதம் மாறியபடியுள்ளனர். கிறிஸ்துவ மதத்தினால் ஆசியா மைனர் கிரீஸ், எகிப்து, இத்தாலி ஆகிய நாடுகளில் சிலை வணக்க மதம் ஒழிந்து போனது அறிந்ததே.

கிறிஸ்துவமதம் தோன்றிய காலத்தில் மேற்கு நாடுகளில் ஆரிய மதம் பூண்டற்றுப் போயிற்று. கிரீஸ் நாட்டிலே இடிந்த கற்சிலைகள் ஏராளமாகக் காட்சி தருகின்றன. பழைய கற்சிலைகள் மார்கட்டுகளிலே, பொம்மைக் கடைகளிலே விற்பனைக்கு வருகின்றன. முன்னர் கடவுளாக வணங்கப்பட்ட சிலைகள் இப்போது பொருட்காட்சி சாலைகளிலே இடம் பெற்றிருக்கின்றன. இவைகள் அமெரிக்கா முதலிய அயல்நாட்டினருக்குச் சிறந்த கலைக் காட்சியாகவுள்ளன. ஆனால், இந்தச் சிலைகளை இப்போது யாரும் வணங்குவதில்லை. கிரீசில் சிலை வணக்கம் பூண்டற்றுப் போய்விட்டது.

இத்தாலியிலும் சிலை வணக்க முறைக்கும் கோட்பாடுகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. எகிப்திலே முற்காலத்தில் காளையையும் நைல் ஆற்றையும் வணங்கினர். ஆனால், இப்போது யாரும் அந்தப்படி வணங்குவதில்லை.

இந்தியாவில் கங்கையைத் தேவி என்றும், தெய்வம் என்றும் வணங்குவதுபோல் நெடுங்காலத்துக்குமுன் எகிப்தியரும் நைல் நதியைத் தந்தையாகப் பாவித்து வணங்கினர். சிவன் சடைமுடியிலிருந்து கங்கை வருவதாக இந்துக்கள் கூறிக்கொள்வதுபோல் எகிப்தியரும் நைல் நதி வானுலகிலிருந்து வருவதாக எண்ணமிட்டுக் கொண்டனர். ஆனால் இப்போதோ, இந்த நைல் ஆற்றங்கரையில் இருந்த கோயில்கள் பாழடைந்து கிடக்கின்றன. இப்போது இங்கு சிலை வணக்கத்தினரே கிடையாது.

இந்து தத்துவமும் இப்போது இப்படியாகத்தான் ஆதரவிழந்து வருகிறது.


கிரிஸ், இத்தாலி, எகிப்து முதலிய நாடுகளில் சிலை வணக்கத்திற்கு ஏற்பட்ட கதியை எண்ணிப் பார்க்குமிடத்து, இந்த நாடுகளுக்கு ஏற்பட்ட கதி நாளை இந்தியாவுக்கும் ஏற்படலாமென அஞ்சச் செய்கிறது. வங்காளத்திலும் இந்து மதத்தின் அநாதரவு நிலைமையே இக்கூற்றுக்கு ஆதாரமாகிறது. 500 ஆண்டுகளுக்குப்பின் வங்காளத்திலுள்ள இந்துக்கோயில்களும், கடவுள் சிலைகளும் பொருட்காட்சி மண்டபங்களில் இடம்பெறும் பொருள்களாகி விடலாம். காளிகோயில் என்பது பழைய கல்வெட்டுக் காட்சிப் பொருளாகி விடலாம். இந்தப் புராணங்களுக்கும் கிரேக்கப் புராணங்களின் கதி ஏற்படலாம்

கங்கையில் புண்ணிய தீர்த்தமாடுவோரோ, பூமாலைகள் சூடுவோரோ, பிரார்த்தனைகள் அர்க்கியங்கள் செய்வோரோ இல்லாமற்போகலாம். ஒன்று சாகவேண்டும்; அல்லது துணிந்து சீர்திருத்திக் கொண்டு உலகத்திற்கேற்ற நடப்பு முறையில் முன்னேற வேண்டும் என்ற கட்டத்தை அடைந்து நிற்கிறது இப்போது இந்துமதம்.


நூல் புரட்டு இமாலய புரட்டு

ஆசிரியர்- தந்தை பெரியார்

Comments

Popular posts from this blog

அய்யப்பன் கதை

‘சொர்க்கவாசல்’ மகிமை

கந்த சஷ்டி