மதமும் விஞ்ஞானமும் - அத்தியாயம் 6

அத்தியாயம் 6

கடவுள்

ஆவியே, அல்லது ஆத்மாவே கடவுளாக மாறி விட்டதென்று முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது. ஆகையால், ஆத்ம நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றாக நிற்க வேண்டும். அல்லது ஒன்றாக வீழ வேண்டும். மனிதனை ஜீவாத்மாவாகவும் (சிறு ஆத்மாவாகவும்) கடவுளைப் பரமாத்மாவாகவும் (பெரிய ஆத்மாவாகவும்), பரம புருஷனாகவும் நம்புகிறார்கள். இதனால் கடவுள் மனிதனென்றே சொல்லலாம். மேலும் மத விஷயமான கிரந்தங்களை ஆராய்ந்தால், கடவுள் மனித உருவெடுத்து வந்ததாகத் தெரிகிறது. ஆகையால், மனிதன் கடவுளுக்குத் தன் உருவத்தையும் தன் மேலான குணங்களையும் கொடுத்திருக்கிறான் என்பது பெறப்படுகிறது. தத்துவ சாஸ்திரமும், கடவுள் நம்பிக்கைக்கு இடம் தராது.
கடவுள் ஒருவரே; அவர் உலக சிருஷ்டிக்கு முன்னும் உலக நாசத்திற்குப் பின்னும் உள்ளவர்; ஜீவர்களின் மேல் அன்பு கூர்ந்து, அவர் சராசரங்கள் யாவும் படைத்து ரட்சித்து அழிக்கிறார்; அவரன்றி ஓரணுவும் அசையாது; அவர் இயற்கைக்குப் புறம்பாகவும். இயற்கைக்கு உள்ளும், எள்ளில் எண்ணெய் போல் இருக்கிறார் என்று பல மதங்களும் முறையிடுகின்றன. மேலும் ஆஸ்திகர்கள், அசேதனமான சடப்பொருள்களை அல்லது அணுவைச் சேர வேண்டிய இடத்தில் சேர்த்து அழகான உருவங்களையும், வஸ்துகளையும் கடவுளே செய்ய முடியுமே தவிர, மற்றெவராலும் முடியாது. இந்த உலகம் திடீரென்று உண்டானதென்பது எவ்வளவு மூடத்தனம். ஒரு பழம் பூமியில் விழும்போது, அது வெவ்வேறு திசைகளிற் செல்லாதபடி பூமிக்கு நேராக விழச் செய்பவர் கடவுளே என்பார்கள்.

இயற்கைத் தத்துவ சாஸ்திரிகள் மேற்குறித்த வினாக்களுக்குச் சுலபமாக விடை  பகரக்கூடும். ஒரு பழமானது நாலா பக்கங்களிலும் விழும் இயற்கையுடையதாயிருந்தால், அப்பொழுதுதான் அதை (அப்பழத்தை) அப்படி விழாதபடிக்கு ஒரே முகமாகச் (னுசைநஉவடி) செல்லும்படி கர்த்தா ஒருவர் ஆளுகிறாரென்று சொல்லலாம். பல திசைகளில் செல்லுவது பதார்த்தங்களின் இயற்கை என்றால், அது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கப்படும். ஆகையால், ஒவ்வொரு பொருளும் அதன் சுபாவத் தன்மையையே காட்டும். ஒருவருடைய இச்சையால் அப்பொருளின் தன்மை விளங்கவில்லை; இச்சையில்லையென்றால், இச்சிக்கிறவருமில்லை. கர்த்தாவுமில்லை. சக்தியும் சடமும் சேர்ந்துசிங்கத்தின் மூளையை உண்டாக்குமா? சிங்கத்தின் மூளையை உண்டாக்க வேண்டுமென்றா சடமும் சக்தியும் உண்டாயின? இல்லை. சடமும் சக்தியும் ஒருவராலும் உண்டாக்கப்படவில்லை. இவை ஒரு நட்சத்திரத்தையும் செய்யும், ஒரு விருட்சத்தையும் உண்டாக்கும். மனிதனையும் சிருஷ்டிக்கும், ஒரு பயனைக் கருதி ஒரு பொருள் உண்டாக்கப்படவில்லை. சிங்கத்தின் அழகிய மூளையைக் கடவுள் ஏற்படுத்தினாரென்றால், மற்றப் பிராணிகளைக் கொல்லும் குரூர குணத்தையும் அவரே ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம்.

சாதாரணமாகப் பிராணிகள் மற்றையப் பிராணிகளைப் பிடித்துத் தின்னுகின்றன. பெரிய பிராணிகள் சிறிய பிராணிகளையும் சிறிய பிராணிகள் இன்னும் சிறிய பிராணிகளையும் புசிக்கின்றன. இப்போராட்டத்தைக் கண்ணுற்ற ஒருவரும் கடவுள் இருக்கிறாரென்று நம்பார்கள். நம்மைச் சுற்றியிருக்கும் காற்றிலும், பூமியிலும், தண்ணீரிலும் கோடிக்கணக்கான பூச்சிகளும், அணு தரிசினிக் கண்ணாடிக்கும் புலப்படாத சிறு கிருமிகளும் நமக்கும் மற்ற பிராணிகளுக்கும் கொடூரமான வியாதிகளை உண்டாக்குகின்றன. இவைகளை ஏன் கடவுள் படைத்தார். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது இப்படிப்பட்ட அருமையான மானிட ஜன்மத்தில் மூடர்களையும், குரூபிகளையும், முடவர்களையும், குரூரக் குணமுடையவர்களையும் படைத்த கடவுள் கடவுளோ? பணக்காரர்களையும், ஏழைகளையும், தீண்டத்தகாதவர்களையும், அரசர்களையும் கடவுள் படைத்தாரோ? இல்லை. ஏழைகள் விட்ட கண்ணீரெல்லாம் சேர்ந்தால், இக்கடலைப்போல் பத்துக் கடல்களை நிரப்பலாம். இதற்கெல்லாம் கடவுளே காரண கர்த்தாவென்று சொல்லலாமன்றோ

காரியமும் காரணத்தின் பாலதாகும். ஈஸ்வரன் உலகத்தை உண்டாக்கினானென்றால், சுக துக்கமும், நன்மை தீமைகளும், சுத்த அசுத்தங்களும் அவரிடமிருந்துதானே உண்டாகின்றன. இன்ப துன்பங்களும், வெறுப்பு விருப்புகளும் அவரிடத்திலிருந்து உண்டானால் அவருக்கே இன்ப துன்பங்களும் வெறுப்பு விருப்புகளும் இருக்குமன்றோ? எல்லாக் காரியங்களுக்கும் ஈஸ்வரனே கர்த்தாவாக இருந்தால், புண்ணியம் செய்வதனால் என்ன பிரயோஜனம்? இன்ப துன்பங்கள் அவரால் ஆக்கப்படவில்லையென்றால், மற்ற காரியங்கள் ஒன்றாவது அவரால் ஆக்கப்பட்டிருக்க முடியாது. ஆகையால், கடவுள் சர்வ சக்தியும் சர்வ வல்லமையும் தயையும்சாந்தமும், அன்பும் உடையவரென்பது பொய்யாகின்றது.

ஆனால், பிரபஞ்சம் திடீரென்று (க்ஷல ஊயஉந) உண்டானதா? காரணமில்லாமல் காரியமில்லை என்பதற்கிணங்கக் கடவுளே பிரபஞ்சத்திற்குக் காரணமென்றால், அக்காரணத்திற்கு மற்றொருகாரணம் வேண்டும். ஆகையால், காரிய காரண வாதத்தால், கடவுளை நிரூபிக்க முடியாது. சிலர் கடவுளும், இயற்கையும் வேறு என்பார்கள்? இயற்கையும், கடவுளும் வேறு என்றால், கடவுள் எங்கு நின்று கொண்டு எப்பொருளைக் கொண்டு, என்ன கருவி காரணங்களுடன் இயற்கையைப் படைத்தார். இயற்கையும், கடவுளும் ஒன்று என்றால், அக்கடவுள் நம்மிடத்தும், இயற்கைப் பொருள் ஒவ்வொன்றிலும் இருக்கவேண்டும். அப்படியானால் நாம் ஏன் கடவுளை வந்தித்து வழிபாடு செய்ய வேண்டும்? கடவுள் ஒரு புருஷரன்று, அது ஒரு சக்தி. இயற்கைச் சட்டங்களிலிருந்து (டுயற டிக சூயவரசந) கடவுள் உண்டென்று யூகிக்கலாமென்பார்கள் மேற்சொன்ன இயற்கைச் சட்டங்கள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவையல்லஅவைகள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவை. மனிதன் தன் அனுபவத்தை ஒன்று சேர்த்து, இந்த இந்தக் காரணங்களால் இன்னின்ன காரியங்கள் நடைபெறுகின்றனவென்று சட்டங்கள் ஏற்படுத்திக் கொண்டான். மனிதன் அன்றி இயற்கைச் சட்டங்களுக்கு அர்த்தமில்லை.

நாம் நீதியாக நடக்கவில்லையா? இந்நீதியைக் கற்பித்த கடவுள் இல்லையோ? தர்ம சாஸ்திரங்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்டவைகளே தவிரக் கடவுளால் கற்பிக்கப்பட்டவைகளல்ல. மனிதன் தன் வாழ்வு சம்பந்தமாகச் சில சட்ட திட்டங்களை எழுதி வைத்தான். மனிதன் முன்னேற்றமடையப் பழைய நீதிகளை ஏற்படுத்திக் கொண்டான். கடவுளிருக்கிறாரென்று, ஜனங்கள் அன்பும், நீதியும், உண்மையையும் உடையவர்களாயில்லை. இந் நற்குணங்களில்லாவிடில், ஜன சமூகம் அழிந்துவிடும். மேலும் கடவுளுடைய நீதி அக்கடவுளை ஏற்படுத்தியவன் நீதியையே ஒத்திருக்கும் யோக்கியன் யோக்கியமான கடவுளையும், திருடன் திருட்டுக் கடவுளையும் கற்பித்துக் கொள்ளுகிறான். கடவுள் திருடியதாகவும், பொய் சொன்னதாகவும், விபசாரம் செய்ததாகவும் புராணங்களில் மனிதர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்

மனிதனுடைய நீதியும், கல்வியும் விருத்தியாக, அவன் தன் கடவுளுக்கு வேறு குணங்களை ஏற்படுத்திக் கொண்டானே தவிரக் கடவுள் மனிதனை உண்டாக்கவில்லை. உலகத்தார் கடவுள் ஒருவர் உண்டு என்று நம்புகிறதை இல்லையென்று எப்படிச் சொல்லலாம்? என்று சிலர் வினவலாம். உலகத்தார் நம்பியிருந்த பல விஷயங்கள் இப்போது தப்பென்று விஞ்ஞான சாஸ்திரம் ருஜுப்படுத்துகிறது. உதாரணமாக இப்பூமி தட்டையாக இருக்கிறதென்றும், பூமி சுற்றாமல் ஒரேயிடத்தில் இருப்பதாகவும் ஜனங்கள் நம்பி வந்தார்கள். இந்நம்பிக்கைகள் சரியல்லவென்று பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆகையால், விஞ்ஞான சாஸ்திர ஞானம் வளர வளர தப்பு அபிப்பிராயங்கள் ஒழிந்துபோகும்.

ஆனால், சில ஆஸ்திகர்கள் கடவுள் மனோவாக்குக் காயத்திற்கு அப்பாற்பட்டவர்; இந்த ரகசியத்தை மனிதன் அறிய முடியாது என்பார்கள். கடவுள் அந்தரங்கமென்றால், அவரை ஒருவரும் தெரிந்துகொள்ள முடியாது. அவருக்குப் பலவிதமான குணங்களைக் கற்பிப்பது தவறு.

ஆஸ்திகர்கள் பட்சபாதமில்லா உண்மையை நாடுவார்களானால், நாம் பின் சொல்வதைச் சரியென்று ஒத்துக்கொள்வார்கள். கடவுள், நல்ல வேலைக்காரனைப் போல், தன் வேலையில் கண்ணும் கருத்தும் செலுத்தாது கெட்ட வேலைக்காரனைப் போலவும் குரூர குணமுடைய பைத்தியக்காரனைப் போலவும் தன்னிஷ்டப் பிரகாரம் புற்பூண்டு மிருக - மானிட வர்க்கங்களையும், எண்ணிறந்த நோய்களையும், அதனாலுண்டான பயங்களையும் ஏற்படுத்தி வைத்தார். அவர் குருடாயிருந்தால், அவர் செய்த அக்கிரமம் அவருக்குத் தெரியாது. அவருக்குக் கண்ணிருந்தால், அவர் செய்த பாவம் அவரைப் பின் தொடரும். அவர் நம்மைக் கவனிக்கிறதில்லை; நம் பொருட்டு ஒரு நன்மையும் செய்கிறதில்லை.

  ஆனால், சிறு குழந்தை பூனைக் குட்டியுடன் விளையாடி, அதன் பிறகு அதை நாயை விட்டுக் கடிக்க வைப்பது போல, பிறகு பலவிதத் தீங்குகளையும் விளைவித்து நாம் கஷ்டப்படும்போது நகைத்து விளையாடுகிறார். இடியும், மின்னலும், வெள்ளமும், சுழல்காற்றும், பூகம்பமும் கடவுளுடைய பெரும் வல்லமையையும், சக்தியையும் காட்டுகிறதென்று சொல்லுவது உண்மையென்றால், கடவுள் வானத்தில் உட்கார்ந்துகொண்டு தான் இன்னதுதான் செய்கிறோமென்று தெரியாமல் மேகங்களை உதைத்துத்தள்ளி ஜனங்களுக்குத் தீங்கு விளைவிக்கிறார். இவ்வித நீதிகளையும், கொடூரங்களையும் செய்யும் கடவுளை நம்புவதற்கு இடமுண்டோ? முடிவுரை


மதவாதிகளும் பாமர ஜனங்களும் அவனன்றி ஓரணுவுமசையாது என்பர். ஆனால், அவனவனன்றி ஓரணுவுமசையாதென்பதே விஞ்ஞான சாஸ்திரிகளின் நேரிய அனுபவமாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன்னே நெப்போலியன் என்ற சக்ரவர்த்தி லாப்லேஸ் (டுயயீடயஉந) என்னும் பிரான்ஸ் தேசத்து வான சாஸ்திரியைக் கண்டு, உங்களுடைய திட்டத்தில் (ளுலளவநஅ) கடவுளை எங்கே வைத்தீர் என்று வினவ, உடனே வான சாஸ்திரி அய்யா! என்னுடைய திட்டத்தில் கடவுளுக்கு இருப்பிடமில்லை என்று பதில் அளித்தார். இப்போது ஒரு பவுதிக அல்லது ரசாயன சாஸ்திரியையோ, அல்லது பூமிநூல், உயிர்நூல், மானிட தத்துவ நூல் முதலிய சாஸ்திர வல்லுநர்களையோ, உங்கள் ஆராய்ச்சியில் கடவுள் எதையாவது அசைக்கிறாரா? அல்லது ஆட்டி வைக்கிறாரா? என்று கேட்டால், அவர்களில் பெரும்பான்மையோர் லாப்லேஸ் சொன்ன மாதிரியே பதில் உரைப்பார்கள். இவர்களில் சிறுபான்மையோர், மதவாதிகளின் பழைய கொள்கையையே இன்னும் நம்பி வருகிறார்களென்பதில் அய்யமில்லை. மூன்று வைத்தியர்களில் இருவர் நாஸ்திகர் என்ற பழஞ்சொல் ஒன்று மேனாடுகளில் வழங்கி வருகிறது. பெரும்பான்மையோர் நிரீச்சுர அநான்மவாதிகளாயும் மதத்தில் பற்றில்லாதவர்களாயும், சிறுபான்மையோர் மதத்தில் ஏதோ பற்றுடையவர்களாயுமிருப்பார்கள் என்பதே அப்பழமொழியின் அர்த்தம். இச்சிறுபான்மையோர் பாமர மக்களைப்போல் மதத்தில் நம்பிக்கை வைப்பதற்குக் காரணமென்ன? இன்னும் பல விஷயங்களைப் பற்றி விஞ்ஞான சாஸ்திரிகள் திடமான முடிவிற்கு வரவில்லை என்பது ஒன்று. மதத்தில் உள்ள பல ஆபாசங்களைப்போல விஞ்ஞான சாஸ்திரங்களிலும் சில முரணான கொள்கைகள் உள்ளனவென்பது மற்றொன்று.

உண்மையாகவே அநேக விஷயங்களைப்பற்றி நாம் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். ஒரு விஷயத்தை முழுவதும் தெரிந்து கொள்ளுவதற்கு 60,000-ஆம் வருஷம் ஆகுமென்று வைத்துக் கொள்வோம். ஆகையால், 60,000-ஆம் வருஷம் வரையில் அவரைப்பற்றி யாதொன்றும் சொல்லாது சும்மாயிருக்க வேண்டுமா? இல்லை. இம்மாதிரிக் கொள்கையை ஒருவன் கைப்பிடித் தொழுகுவானாகில், அவன் யாதொரு விஷயத்தையும் அறிந்து கொள்ள முடியாது. விஞ்ஞான சாஸ்திரத்திற்கு ஆதாரமாகவிருப்பது நமது அனுபவமேயாகும். மாறுபடாத அநுபவத்தையே சட்டமென்கிறோம். பலவிதச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சித்தாந்தத்தை நிலை நிறுத்துகிறோம். எதிர்கால அநுபவத்தை மேற்சொன்ன சித்தாந்தத்தின் மூலமாக விளக்கிக் காட்டுகிறோம். இச் சித்தாந்தம் புதிய அநுபவத்திற்கு இடம் கொடுக்குமானால், அதைச் சரியென்று ஒத்துக் கொள்கிறோம். இடங்கொடாவிட்டால், அதைத் தள்ளிவிட்டு நூதன அநுபவத்தைச் சேர்த்துக் கொள்ளக்கூடிய வேறொரு சித்தாந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளுகிறோம். இவ்வாறே ஒவ்வொரு விஞ்ஞான சாஸ்திரமும் அபிவிருத்தியடைகிறது.

  சித்தாந்தங்கள் அவைகளை ஆக்கியோனுடைய அறிவைப் பொறுத்திருந்தால், சில சமயங்களில் வேறுபடலாம். ஆனால், அது அனுபவம் எக்காலத்திலும் எத்தேசத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். விஞ்ஞான சாஸ்திரம் ஒரு விஷயத்தின் கடைசியான அர்த்தத்தைப்பற்றியோ அல்லது பூரணமான ஞானத்தைப்பற்றியோ கவலை கொள்வதில்லை. ஆகையால், ஒரு விஷயத்தைப்பற்றி நமக்குப் பூரண ஞானம் கிடைக்கும்வரையில் சும்மாயிருக்க வேண்டிய அவசியமில்லை. தற்கால ஞானத்தைக்கொண்டே ஒரு சித்தாந்தத்தைத் தோற்றுவிக்கலாம்

இவ்விதச் சித்தாந்தமின்றிப் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கவோ, நூதன சம்பவங்களைத் தெளிவிக்கவோ, எதிர்கால நிகழ்ச்சிகளை முன்னதாகத் தெரியப்படுத்தவோ முடியாது. இது நிற்க, நாம் முன்னே கூறியவாறு அநேக விஷயங்களை இன்னும் அறியாதவர்களாகவிருக்கிறோம். ஒரு காலத்தில் அறியாத ஒரு விஷயத்தை, மனிதன் எக்காலத்திலும் அறிய முடியாதென்று சொல்வது குதர்க்கமாம். மனிதன் முன்பு அறியாத பல விஷயங்களை இப்போது விஞ்ஞான ஆராய்ச்சியால் அறிந்துகொண்டு வருகிறான். இவ்வறியாமையின்மேல் கட்டப்பட்ட மதங்களும், தத்துவங்களும் தற்காலத்தில் இடிந்து வீழ்வதைச் சில விஞ்ஞான சாஸ்திரிகள் கண்டிருந்தும், இவ்வறியாமைக்குச் சக்தி (ஞடிறநச), ஜீவசக்தி (ஏவையட குடிசஉந), அனிமா மண்டி (ஹஅய ஆரனே), இலான் வைடல் (நுடய ஏவையட), எண்டலசி (நுவேநடநஉல), மனம் (ஆனே), டைரெக்டிவ் போர்ஸ் (னுசைநஉவஎந குடிசஉந) என்ற பற்பல பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள். மேற்சொன்ன சொற்றொடர்களுக்கும் மதக் காப்பாளர்கள் நம்பும் கடவுளுக்கும் யாதொரு வித்தியாசமில்லை.

மதங்களிலுள்ள ஆபாசங்களைப் போல விஞ்ஞான சாஸ்திரத்திலும் ஆபாசங்களிருக்கின்றனவென்று சிலர் சொல்வது தவறான அபிப்பிராயமாகும். ஒரு விஷயத்தை விளக்குவதற்காக ஒரு சித்தாந்தத்தை உண்டாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக ஈதர் என்ற சர்வ வியாபகமான பதார்த்தம் ஒன்று உண்டென்று எடுத்துக்கொண்டு, அதன் மூலமாக உஷ்ணம், சப்தம், மின்சாரம் முதலியன ஆகாயத்தில் பரவுவதாக அல்லது ஓடுவதாக விஞ்ஞானிகள் விளக்கிக் காட்டினார்கள். ஆனால், ஈன்ஸ்டின் (நுளேவந), சித்தாந்தப் பிரகாரம் இந்த ஈதருக்கு அவசியமே இல்லை. ஆகையால், இப்போது விஞ்ஞான சாஸ்திரிகள் ஈதர் என்ற சித்தாந்தத்தை யாதொரு வருத்தமில்லாமல் புறக்கணித்து விடுகிறார்கள். இதனால் விஞ்ஞான சாஸ்திரம் அழிந்துவிட்டதா? இல்லை. உண்மையாகவே, இவ்விதச் சித்தாந்தங்களினால் முரணான விஷயங்கள் வெளிக்கிளம்பப்பட்டு, தள்ளப்படுகின்றன. ஆகையால், விஞ்ஞான சாஸ்திரிகள் ஆபாசமான விஷயங்களை ஒத்துக்கொள்வதில்லை. சில மதவாதிகள் சொல்வது போலக் கடவுள் என்பது ஒரு சித்தாந்தமென்று எடுத்துக் கொண்டாலும், அச்சிந்தாந்தம் என்ன விஷயத்தை விளக்கக்கூடுமென்று யோசித்துப் பாருங்கள். கடவுளைச் சித்தாந்தத்தினால் பிரபஞ்சத்திலுள்ள எந்த விஷயத்தையாவது அறிந்துகொள்ள முடியுமா? முடியவே முடியாது. ஆகையால், கடவுள் நம்பிக்கையாலும், ஆத்ம நம்பிக்கையாலும் உலகத்திற்கு யாதொரு பிரயோஜனமுமில்லை.

மதங்களுக்கு, ஆத்மாவும் கடவுளும் பொதுக்குணங்களாக விருப்பினும், அவைகள் ஒவ்வொன்றிற்கும் விசேஷகுணங்கள் இருக்கின்றன. ஒரு மதத்திற்கு ஜாதியும், சடங்காச்சாரமும் உயிர்போல் இருக்கின்றன. இன்னொரு மதத்திற்குப் பிடிவாதமும் முரட்டுத்தனமும் இயற்கையாயிருக்கிறது. ஒரு மதத்திற்குச் சுயபுத்தியைப் பயன்படுத்தாது மதபோதகர்களுடைய கட்டுக்கதைகளை நம்புதல் முக்கிய கொள்கையாயிருக்கிறது. மற்றொரு மதத்திற்குத் தேகத்தை வருத்துதலும் நிர்வஸ்திரதாரியாய் உலாவுதலும் பிரத்தியேகக் குணமாம். வேறொரு மதம் இறந்தவர்களையும் அரசர்களையும் பூஜிக்கும்படி ஆக்ஞாபிக்கின்றது. இவ்வாறு பற்பல மதங்களும் பற்பல சிறப்பிலக்கணங்களுடன் திகழ்கின்றன. இப்பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள் நடவடிக்கையில் மேற்கூறிய விசேஷ குணங்களையே காட்டுகிறார்கள். ஆகையால், எல்லா மதங்களும் ஒரே வழியைப் பிரஸ்தாபிக்கின்றன என்பது சுத்தப் பொய்யாகும்.
பண்டைக் காலத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கும் மற்றைய கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடந்தேறிய சச்சரவுகளையும் அட்டூழியங்களையும் சரித்திரப்பூர்வமாக ஆராய்ந்தாலும், இந்தியாவில் ஒரு மதஸ்தர் பிற மதஸ்தர்களைக் கழுவில் ஏற்றிய கொடுஞ்செயல்களைக் கவனித்தாலும், ஒரு ஜாதியார் தங்களுக்கு ராஜிய பலமும், ஆள்பலமும் கிடைத்தபோது, மற்ற ஜாதியார்களை எவ்வாறு துன்பப்படுத்தியும், தாழ்த்தியும், அவர்களைப்பற்றிக் குறைவாக எழுதினார் என்பதை நினைத்தாலும், தற்காலத்தில் அற்ப விஷயமாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடக்கும் போராட்டத்தைக் கண்டாலும், இவர்கள் நடவடிக்கையில் தெய்வ பக்தியுடையவர்களென்று சொல்வதற்கே இடமில்லை. மதத்தின் ஊழல்களையும் கடவுளின் பேரால் செய்யப்பட்ட மகாபாதகங்களையும் ஒருவர் எடுத்துக்காட்டினால் மேற்சொன்ன மனப்பாங்கு உடையவர்கள் மதம் போச்சு மதம் போச்சு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

மதம் போச்சு என்றால் என்ன? மதம் அழிந்து விட்டால் உலகம் அழிந்துவிடுமா? இல்லை, அழிந்து விடாது. மனிதர் மத நம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கையற்றால் ஒழுக்கம் தவறி நடப்பார்களென்பதே இவர்கள் அபிப்பிராயம். ஆனால், இவ்வெண்ணம் முற்றிலும் தவறு. ஏனென்றால், மதத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் ஒருவிதச் சம்பந்தமுமில்லை. தற்காலக் காட்டுமிராண்டிகளின் நடவடிக்கைகளையும், மற்றைய நாகரிகமற்ற கூட்டத்தார்களின் நடையுடை பாவனைகளையும் ஆராய்வோமானால், சன்மார்க்கம் உண்டான விதத்தைச் சரித்திரப் பூர்வமாக அறியலாம். மனிதன் கூட்டமாக வாழும் இயல்புடையவன். தனித்தனி நபர்களின் குணம் எவ்வளவு வேறுபட்டாலும், அக்கூட்டம் சிதையாதிருப்பதற்காக, அவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். ஊக்கம், அடக்கம், மரியாதை, பரஸ்பர நம்பிக்கை முதலிய நற்குணங்கள் தோன்றினால்தான் அக்கூட்டம் மேலும் மேலும் விருத்தியடையும். அக்கூட்டத்தைச் சேர்ந்த தனிநபர்கள் சுயநலத்தை விட்டுவிட்டு, அக்கூட்டத்தின் நலத்தையே கவனிக்க வேண்டும். இவ்வாறு பரோபகார சிந்தனை உற்பத்தியாகிறது. பெண்களைக் காப்பாற்றுதலும், குழந்தைகளை வளர்ப்பதும் முதியோரைப் போற்றலும் ஆகிய காரியங்கள், அன்பு, தயை, இரக்கம் முதலிய சிறந்த குணங்களை விருத்தி செய்கின்றன. ஆகவே, இந்நன் நடக்கைகளையுடைய கூட்டமே முன்னேற்றமடையும். இவைகளை ஆதரிக்காத கூட்டங்கள் நாளடைவில் சிதைந்தொழிந்து போகும் நாள் செல்லச் செல்லச் சமுதாயச் சிறப்பிற்கு ஒழுக்கமே அவசியமென்று பெரிதும் போற்றப்பெற்றது. இவ்வாறு ஒழுக்கம் மதத்துடன் யாதொரு சம்பந்தமில்லாமலே உற்பத்தியாயிற்று. பிற்காலத்தில்  கடவுளின் பிரதிநிதிகள், ஒழுக்கம் கடவுளால் கயிலயங்கிரியிலோ சீன மலையிலோ சொல்லப்பட்டதென்று மதத்துடன் புகுத்திவிட்டார்கள். இச்சம்பந்தத்தினாலே ஒரு காலத்தில் நன்மையேற்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது இச்சம்பந்தத்தை ஒத்துக்கொள்வதற்கு இடமோ, அவசியமோ இல்லை. மதம் மனிதனுக்கு அவசியமில்லை. ஆனால், மனிதன் தன் க்ஷேமத்திற்காகவும், உலக க்ஷேமத்திற்காகவும், சன்மார்க்கத்தைக் கைவிடமாட்டான். ஆதாரமில்லாத கடவுள் என்ற சொல் அல்லது எண்ணத்தின் பேரில் ஒருவன் ஒழுக்கமுடையவனாக இருக்கமுடியுமானால், மனிதக் கூட்டத்திற்காகவும், மனித க்ஷேமத்திற்காகவும், நீதிமானாக ஏன் இருக்க முடியாது?

மதம் அழிந்துவிட்டால் என்ன? மதம் அழிந்துவிட்டால், பற்பல குழப்பங்கள் ஏற்படுமென்று சிலர் கருதுகின்றனர். தற்காலத்தில் உலகத்தில் எங்குப் பார்த்தாலும் ஒருவிதக் குழப்பமில்லாமலே மதத்தைப் புறக்கணித்து விடுகிறார்கள். மத நம்பிக்கை அழிவதனால் பல மாறுதல்கள் உண்டாகலாம். மதத்தின் பேரால் செய்யப்பட்ட வியாபாரங்கள் யாவும் அழிந்துபோம். கோயில் விபச்சாரம் ஒழிந்துபோம். ஜாதி இறுமாப்பும், உயர்வு தாழ்வும் தொலைந்துபோம். தாழ்மை, அடக்கம் என்ற குணங்கள் சமுதாயத்திற்குப் பிரயோஜனமில்லை. ஆகையால், இவைகளும் அழிந்துபோம். பெண் ஆணுக்கு அடிமையென்ற எண்ணமும் பெண்ணுக்கு மாத்திரம் கற்பு அணிகலமென்பதும் தொலைந்துபோம். மாதரின் கற்பை மதவாதிகளே மதிப்பதில்லையென்றால், மற்றவரைப் பற்றிச் சொல்வானேன்! ஒரு கன்னிப்பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்பது ஒருவனுடைய மனோபீஷ்டத்தைச் சார்ந்திருக்கிறது. ஒற்றுமையற்ற மனங்களே பெரும்பாலும் விபசாரத்திற்குக் காரணமாகும். தகுதியான விவாகங்களினாலும், பெண்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதாலும் விபசாரத்தைத் தடுக்கலாமே தவிர அதைச் சட்டமூலமாகத் தடை செய்யவே முடியாது. கற்பைக் காக்க கைவாள் வேண்டாம்; 1. நாஸ்திகக் கல்வியும், பகுத்தறிவும் பெருக வேண்டும்.
மதம் மதியீனத்திற்கு மதில்; அறிவீனத்திற்கு அரண்; ஆபாசங்களுக்குப் பிறப்பிடம்; முன் ஜன்மம் புணர் ஜன்மமென்ற மிலேச்சக் கற்பனா பாவனைகள் ஒடுங்குமிடம் 2. மதம் மனிதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. 3. விஞ்ஞான சாஸ்திரம் மனிதனுடைய சரியான உற்பத்தியை எடுத்தோதி, எல்லா அந்தகாரத்திற்கும் தாயாகிய மதத்தை, கடவுளை, ஜாதியை வேரோடு அழித்து, மனிதருக்குள் ஒற்றுமை உண்டாக்கிப் புனித வாழ்வை அடையச் செய்கிறது. விஞ்ஞானமே மெய்ஞ்ஞானம் விஞ்ஞான சாஸ்திரம் வளர வளர மதம் அழிந்து கொண்டே போகும். இவை மக்கள் அனுபவத்தில் கண்டறிந்த உண்மையாகும். விஞ்ஞானம் வளர்க! மதம் ஒழிக!




நூல் - மதமும் விஞ்ஞானமும்

ஆசிரியர் கே.பிரம்மச்சாரி

Comments

Popular posts from this blog

அய்யப்பன் கதை

‘சொர்க்கவாசல்’ மகிமை

கந்த சஷ்டி