இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்?
திருச்சியில் பெரியார் பேருரை
புராணங்களை ஒழிக்கும் வகையாகப் புராணங்களையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் எரிப்பதற்கு 15-20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் கூறினோம் என்பதாகவும், இன்று ஒருபடி முன்னேறி விக்கிரகங்களை உடைக்கத் தீர்மானித்தோம் என்பதாகவும், தந்தை பெரியார் அவர்கள் திருச்சி தேவர் ஹாலில் 29.3.1953ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் கூறியதோடு, ஏன் திராவிடர் கழகம் இம்முடிவுக்கு வந்ததென்பதையும் தெளிவுபடுத்தியதன் சுருக்கம்:
பேரன்புமிக்க தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இக்கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இதற்கு முன் பேசிய சைதாப்பேட்டை தோழர் கு.மாணிக்கம், சாதாரணமாக ஓரளவுக்கு எளிய தன்மையில் புராணங்களைப் பற்றியும் அவைகளில் பொதிந்துள்ள ஆபாசங்களைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொன்னார்.
இன்றைய இந்தக் கூட்டத்துக்குப் பெண்கள் வரக் கூடாது என்று விளம்பர அறிக்கையில் போட்டுவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஏன் எனில், நமது கடவுள்கள் விஷயமாக அவ்வளவு ஆபாசங்களைப் புராணங்கள் கொண்டுள்ளன. அக்காலத்தில் ஆபாசங்களைப் புகுத்தாமல் புராணம் எழுதவே முடியாதோ என்னவோ! சிலருக்குக் கொக்கோகம் முதலிய காமதூர விஷயங்கள்தான் பிடிக்குமென்பார்கள். அதைப்போல, நாகரிகமற்ற காட்டுமிராண்டிக் காலத்தில் புராணங்களை எழுதியவர்கள் ஆபாசங்களைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படாமல் (கம்பனைப்போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) தங்கள் மனதில் நினைத்தையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். காலதேச வர்த்தமானத்தையொட்டி அந்தக் காலத்திற்கு ஏற்றவாறு அவர்கள் எழுதியிருக்கலாம் என்று கருதினாலும், அந்தப் பரம்பரையர்களுக்கு இன்றுள்ள மதவெறி காரணமாக அவைகளில் உள்ள ஆபாசங்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கு வெளியிடாமலிருக்க முடியவில்லை. மேலும், இந்தப் புராணங்கள் முதலியவைகளை நினைத்தவர்கள், தங்கள் தங்கள் விருப்பத்திற்கும், இஷ்டத்திற்கும் ஆபாசங்களுக்கும் ஏற்ற மாதிரியில் எழுதி எழுதி முன்னுக்குப் பின் முரணாகப் போகும் என்றுகூடக் கவலைப்படாமல் சேர்த்துக்கொண்டே வந்துவிட்டார்கள்.
இப்போது இங்கு வேத சாஸ்திர புராணக் கடவுள் என்பதாக ஒரு பொருள் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏன் என்றால் நமக்குத் தெரிந்த சங்கதிகளை, நம்முடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டிய வரையில் நமக்குத் தோன்றிய கருத்துக்களை, இன்றைய தினம் மக்கள் எதையெதை தங்கள் வேதமாகவும் தெய்வமாகவும் கருதிக்கொண்டு இருக்கிறார்களோ அவைகள் எல்லாம் பித்தலாட்டங்கள், மக்களை ஏமாற்றுவதற்கும், அடக்கியாளுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சூழ்ச்சியான முறைகள் என்பதைப் பல ஆராய்ச்சிக் கருத்துக்கள் முதலியவைகளை எடுத்துக்காட்டிச் சொல்லலாம் என்பதற்காகத் தான் இந்தக் கூட்டம் கூட்ட நானும் சம்மதித்தேன். எங்களுடைய கருத்தை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறவர்களல்ல நாங்கள். சொல்லுகிற கருத்துக்களைப்பற்றி மக்கள் சிந்தித்துப் பார்த்து, சரி எனப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக நான் பல முறை கூறி வந்திருக்கிறேன். மறுத்துக் கூறுபவர்கள் முன் வருவதை நான் வரவேற்கின்றேன்.
திராவிடர் கழகம்
ஆனால், திராவிடர் கழகம் ஒன்றுதான் இத்துறையில் பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு வருகிறது. அதற்கு முன்பு ஜஸ்டிஸ் கட்சி என்ற பேரால் இருந்து வந்த இந்தக் கழகம் சமூகத்துறையில் புகாமல் அரசியலில் மாத்திரம் வேலை செய்து வந்தது என்றாலும் அதனால் மக்களுக்கு அது சமயம் ஓரளவுக்கு அரசியல் உணர்ச்சி வந்தது. ஜஸ்டிஸ் கட்சியும் 18 வருட காலத்தில் ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன சாதிக்கக்கூடுமோ அதையெல்லாம் செய்தது; அதன் மூர்த்தண்யமான சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சியும் புது துறையில் புகுந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்கு முன்பே காங்கிரஸ் கட்சி இருந்துவந்தது;
எனினும் அது அப்போதெல்லாம் பார்ப்பனர்களுக்குச் செல்வாக்கும் ஆதிக்கமும், உத்தியோகமும் கிடைக்கப் பாடுபடும் ஒரு கட்சியாகவே இருந்து வந்தது; அதன் மூலம் வெள்ளைக்காரனிடமிருந்து உத்தியோகமும், பதவியும், அதிகாரமும், கொழுத்த சம்பளமும் பார்ப்பனர்களுக்குக் கிடைப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி இருந்து வந்தது. போட்டியாக ஜஸ்டிஸ் கட்சி தோன்றியவுடன்தான் அவர்கள் தமது போக்கை மாற்றிக்கொண்டார்கள். நானும் அந்த மாறுதல் காங்கிரசுடனிருந்தே தான் போராடினேன். அந்த அனுபவம் காரணமாகவே சில காரியங்களையேனும் சாதிக்க விரும்பியே சில நாளிலேயே காங்கிரசிலிருந்து வெளியேறினேன். அரசியலில் உழைப்பது மட்டும் பயன் அளிக்காது; உத்தியோகத்தால் மட்டும் மக்களுக்குப் பயனில்லை; அதுவும் உத்தியோகம் எத்தன்மையான மக்களையும் மதிமயக்கமடையச் செய்யத்தான் செய்யும். அதனால் அஸ்திவாரத்தைத் திருத்தி அமைக்க நாம் சமுதாயத் துறையில் பணியாற்றுவதென முடிவு செய்துகொண்டே இறங்கினேன். சமுதாயம் என்றால் இந்து மதச் சமுதாயம்; இந்து மதச் சமுதாயம் என்றால் அதாவது புராண சமுதாயம்தான். ஆகவே, இங்கு நான் சமுதாயம் என்னும்போது இந்து சமுதாயத்தையே குறிப்பிடுகின்றேன்.
1925ஆம் ஆண்டில்
1925ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் நான் காங்கிரசிலிருந்து வெளிப்படையாகப் பிரிந்தேன். அரசியலின் பேரால் அப்போது காங்கிரஸ் மூலம் பார்ப்பனர்கள் செய்து வந்த பித்தலாட்டங்களை நான் நன்றாய் உணர்ந்ததால் அவைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி ஒரு வருடம் பணியாற்றினேன். ஓரளவு பயனுமடைந்தேன். எனினும் பொதுத் தேர்தல் 1926இல் நடைபெற்றபோது ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப்போய் விடவே, பின்பு சமுதாயம், மதம், புராணங்கள் இவைகளின் பேரால்தான் பார்ப்பனர்கள் இவ்வளவு அதிகாரமும், செல்வாக்கும் பெற முடிகின்றது என்பதை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குத் தெரிவித்து மக்களிடையே அதுபற்றித் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினேன். அந்த எண்ணத்துடனேதான் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்து, குடிஅரசு பத்திரிகையிலும் தொடர்ச்சியாக அவை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வந்தேன். சாதாரண மக்களுக்குப் புரியும்படியாகவும், அரசியல்வாதிகளும் ஓரளவு ஆதரவு அளிக்கும் வகையிலும் படிப்படியாக எழுதி வந்தேன். காலப்போக்கில் இயக்கம் வளர்ந்தது.
இப்போது, அதாவது சமீப காலத்திலே அது திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்றவுடன் அரசியல் தொடர்பையே அறுத்துக் கொண்டேன். தேர்தல், பதவி, கவுரவப் பட்டம் இவைகளை லட்சியம் செய்யாது அவைகளைத் துறக்கக்கூடிய தியாகங்களைச் செய்யக் கூடியவர்களையே கழகத்தில் சேர்த்துக் கொண்டேன். பட்டம், பதவி இவைகளை ஒதுக்கி, உதவும் தியாக மனப்பான்மை, நாணயம், யோக்கியம் இவை உடையவர்களையே கொண்டதாக திராவிடர் கழகத்தை நாளாவட்டத்தில் திருத்தி அமைத்தேன்.
ஆங்கிலத்தில் வழங்கப்படும் (ழடிநேளவல ளை வாந க்ஷநளவ ஞடிடஉல) என்னும் பழமொழியே, அதாவது நாணயம் என்ற சொல் யோக்கியதையினால் வளர்ச்சியடையும், ஒரு திட்டத்தைக் குறிப்பதேயாகும். தியாகம் என்பது சுயநலத்திற்குப் பலனை எதிர்பாராது, லட்சியம் செய்யாது, இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவது என்பதாகும். இந்த இரண்டு தன்மையும் திராவிடர் கழகத்தில் முக்கிய இடம் பெறச் செய்து, இதற்கு மாறுபட்ட சுயநலக்காரர்களைக் கழகத்திலிருந்து ஓடும்படிச் செய்தேன். அதனாலேயேதான் நம் கழகம் இந்த உயர்நிலையை அடைய முடிந்தது.
மரியாதையும் மதிப்பும்
அன்றியும், அதனாலேயே நமது புரட்சிகரமான கருத்துக்களுக்கும், பேச்சுக்களுக்கும் ஏகமாக ஆமோதிப்பு கிடைக்காவிடினும் எதிர்ப்பு இல்லாதபடி - நம் கருத்தைத் தவறு என்றோ, நடத்தையை அயோக்கியம் என்றோ எவரும் கூறாதபடி இயக்கத்தை மிக ஜாக்கிரதையாக, வெற்றிகரமாக நடத்திவர இருத்திவர முடிந்தது. இதனாலேயே தான் நாட்டிலும் ஒரு அளவு மரியாதையும் மதிப்பும் நம் கழகத்திற்கு இருந்து வருகிறது. அதிகாரிகளிடமும் எதிர்க்கட்சியாளர்களிடமும் மதிப்பிருந்து வரும் வகையில், பலம் பொருந்திய ஒரு ஸ்தாபனமாக நமது கழகத்தைக் கருதும்படியாகச் செய்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கெல்லாம் அது பதவியில் இருக்கும் வரையில் தான்; பதவி போய்விடின் யாரும் அக்கட்சியிலிரார்.
காரணம், காங்கிரசில் பதவிப் பித்தர்கள், பணப்பித்தர்கள் தவிர மற்றவர்களுக்கு இடமில்லாமற் போய்விட்டது. ஆதலால், காங்கிரஸ் கட்சி பதவியில் இருக்கிறது. நமக்குப் பதவி கிடைக்கும் என்பதற்காக அதில் பலரும் இருக்கிறார்களே அன்றி அதன் திட்டத்துக்காக அல்ல; அதில் திட்டமும் எதுவும் இல்லை. பதவி அதிகார மோகம் காரணமாகவோ, கட்சியின் திறமைக் குறைவோ அதனால் நாணயக் குறைவோ ஏற்படும்போதெல்லாம் அவை வெளியே தெரியாதவாறு திரையிட்டு - மறைக்கப்பட்டு வருகின்றன.
வேறு கட்சிகள்
நாட்டில் வேறு கட்சிகள் எதுவுமில்லையா என்றால் கம்யூனிஸ்ட் கட்சி என்பதாக ஒரு கட்சி இருக்கிறது. என்றாலும் அதிலும் வசதிக்காக, வாழ்வுக்காக அதில் பெரும்பாலோர் இருப்பதால், அதோடு பார்ப்பன ஆதிக்கமும் அதில் தலைசிறந்து இருப்பதால், அவர்களின் நிலைமை இப்போது மக்களுக்கு நன்றாய் வெளியாகிவிட்டது. அக்கட்சியின் நிலையைக் கவனித்தால் இன்று அதன் முக்கியஸ்தர்களுக்குப் பலனளிப்பதாக இருக்கிறதே அன்றி பாமர ஏழை
- தாழ்த்தப்பட்டோர், சேரிவாழ் மக்கள் இவர்களுக்கு அதில் பலனேதும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.
தாழ்த்தப்பட்டவர்களும் சேரிவாழ் மக்களும் சமூக உயர்நிலைக்குத் திருந்தவோ அல்லது பிற மக்களுடன் சமநிலை அடையவோ அக்கட்சியினரிடம் திட்டம் வசதி இல்லை. அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள்; சமீபகாலத்தில் தலைதூக்கும் வகையிலும் அதன் வேலைகள் தோன்றவில்லை. ஆகவே, உருப்படியாக இருப்பது திராவிடர் கழகம் ஒன்றுதான். இந்து மகாசபை இருக்கிறது; தமிழரசு போன்ற பல கழகத்தினர் இருக்கிறார்கள். ஆனால் தமிழரசுக் கழகத்தினர் தமிழ்நாடு பிரிவினை என்றதுமே அவர்களுக்கு ஒரு தரும சங்கடம், தொல்லை ஏற்பட்டிருக்கிறது! ஆகவே, பிழைப்புக்கு ஒரு வாய்ப்பாகவே தமிழரசுக் கழகமும், இந்துமகா சபையும் இருந்து வருகின்றன.
பிரஜா கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, பிரஜா - சோஷலிஸ்ட் கட்சி முதலியன எல்லாம் அதிலிருப்பவர்கள் தத்தமக்குப் பதவி வாய்ப்புக்காக ஏற்படுத்திக் கொண்டவைகளே தவிர அடிப்படையில் காங்கிரசுக்கு மாறுபட்ட தனித்த ஒரு லட்சியம் - நோக்கம் கொண்டன அல்ல. தேர்தல் காலங்களில் ஓட்டு வேட்டைக்கு, சுயலாபத்துக்கு, கட்சிகள் இருக்கின்றன; அதற்கே பயன்படுகின்றனவே தவிர, உருவான நிலையான கட்சிகள் கிடையாது. எந்தக் கட்சியின் பேரைச் சொன்னாலும் ஆகா! அவனப்படியா? என்று மக்கள் சொல்லிப் போகும் வகையில் இருக்கிறது.
மக்கள் மதிப்பதேன்?
நாம் மக்களிடையே விழிப்பையும் உணர்ச்சியையும் ஊட்டுவதால் நம்மை மதிக்கிறார்களா, இல்லையா என்றில்லாவிடினும், அவர்களுக்குள் ஏமாற்றப்படாத வகைக்கு நம் செயல்கள் பலனளித்து வந்துள்ளன. ஆக,
நாம் இவ்வித வசதிகளை மட்டும் கொண்டு பயனில்லை என்பதாலே காரியம் ஏதேனும் சாதிக்க, நம்மீது மக்கள் கொண்டுள்ள உறுதி - நம்பிக்கை இவைகளைக் கருதும்போது எதையாவது சிந்திக்க வேண்டியவர்களாகிறோம்; சிந்தித்து ஏதேனும் செய்து வருகிறோம். அவ்விதம் செயலாற்றியதன் பயனாகச் சென்ற சில வருடங்களிலும் முன்னேற்றமும் கண்டு வருகிறோம். இந்த முன்னேற்றத்தைத் தீவிரமாக்க வேண்டும். இது காரணமாகவே இன்றைய அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு அரசியல் துறையில் இருந்து ஒதுங்கியிருந்து பின்னர்ப் பார்க்கலாம் என்று கருத்துக் கொண்டிருக்கிறோம்.
புராண ஒழிவு புராணங்களை ஒழிக்கும் வகையாகப் புராணங்களையும், மனுதர்ம சாஸ்திரத்தையும் எரிப்பதற்கு 15, 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் கூறினோம். அந்தப்படி எரித்தோமோ இல்லையோ அது வேறு விஷயம். நமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டோம். இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்தில் குடிஅரசு இதழ்களில் எழுதியிருந்தவை எல்லாம், இன்றைக்குப் பொருந்தக் கூடியனவாக உள்ளன. அந்தக் காலத்திலே காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்த சில தலைவர்கள் எல்லாம் காங்கிரஸ் தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வருவதால் அதற்கான முதல் முயற்சி என்பதாக இந்நாட்டு மக்களுக்குள் பிறவியின் காரணமாக இருந்து வரும் உயர்வு தாழ்வுகளைச் சமுதாய இழிவுகளைக் களைய வேண்டும் என்பதாகத் தீர்மானித்த லட்சியத் தீர்மானத்தைச் சிதைக்க வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்தார்கள்.
மற்றொரு சமயம், புராணங்களை எரிப்பது என்பதான திட்டத்தின் விளைவாக இராமாயணம், கந்தபுராணம் இவைகளை எரிப்பதென்று தீர்மானித்தோம். உடனே புலவர்களும், பண்டிதர்களும் இராமாயணம், கந்தபுராணம் இவைகளில் உள்ள ஆபாசங்களை ஒத்துக்கொண்டு, ஆனால், இராமாயணம், கந்தபுராணம் இவைகளை இலக்கியங்களாகப் பாவியுங்கள்; புராணமாக மதிக்காவிடினும் பரவாயில்லை என்றார்கள். நாம் மறுத்ததும் சிலர் கழகத்தைவிட்டு விலகினார்கள். இன்று மற்றொருபடி முன்னேறி விக்கிரகங்களை உடைக்கத் தீர்மானித்திருக்கிறோம். இத்தீர்மானங்களின் அவசியத்திற்கு, நமக்கு நல்ல பலமான ஆதாரங்கள் இருக்கின்றன.
துணிவு ஏற்பட்டதேன்?
இந்த ஆதாரங்கள் யாவும் வேத சம்பந்தமானவைகளாக அதுவும் டாக்டர் முன்ஷி, நீதிவாதி டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் தலைமையில் எழுதப்பட்டு வெளிவரும் ஆதாரங்களிலேயே இருக்கின்றன. இவர்கள் சமீப காலத்தில் இந்திய சரித்திர கலாசார ஸ்தாபனம் என்பதாக ஒரு கழகத்தை நிறுவி, இந்தியாவின் சரித்திரத்தைத் திருத்தி எழுதி வருகிறார்கள். மொத்தம் எட்டுத் தொகுப்புகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுவரை 2 தொகுப்புகளைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, முதலாவது தொகுப்பில் வேத காலம் வரை இந்தியாவின் கலாச்சார வரலாற்றை வெளியிட்டிருக்கிறார்கள். எதற்கு ஆக என்றால், இந்நாள்வரை வெளியிடப்பட்டுக் கற்பிக்கப்பட்டு வரும் சரித்திரம் ஒரு சார்பாகவே இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். என்றாலும், அமெரிக்க பிரிட்டிஷ் சரித்திராசிரியர்களும், என்சைக்ளோபீடியா என்ற ஞானக் களஞ்சிய நூலும் மற்ற ஆராய்ச்சியாளரும் எழுதியிருப்பது போலவே தான் இந்த முன்ஷி வகையறாக்கள் அவைபற்றி எழுதியிருப்பதும் இருக்கின்றன. இவைகளைப் பார்த்த பிறகு நம்முடையதெனக் கூறப்படும் வேதபுராணங்களின் ஆபாசங்களை வெளியிடுவதில் மேலும் துணிவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அக்கருத்துக் காரணமாகவே, இப்போது வேதமும் வேதக் கடவுள்களும் என்னும் பொருள்பற்றிப் பெரிதும் அதை அனுசரித்தே பேசலானேன்.
நம்மைப் பிரித்து வைத்துள்ளவை
வேதம், மதம், கடவுள்கள் எனப்படும் மூன்றாலுமே நாம் அனைவரும் இந்துக்கள் என்ற ஒரே சமுதாயப் பட்டிக்குள் திணிக்கப்பட்டிருக்கிறோம் எனினும் பல படியாகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம். இந்து மதத்தினராக உள்ள நாம், சுமார் 25 கோடி இந்துக்கள் இருப்பினும், நாம் யாவரும் இந்தக் கடவுள்களினாலோ, மதத்தினாலோ ஒன்றுபடுத்தப்படவில்லை.
இந்து மதம் என்று ஒரு மதமே இருந்தது கிடையாது எனக் காலஞ்சென்ற காந்தியார் உட்பட, பல ஆராய்ச்சிக்காரர்கள் கூறியிருக்கிறார்கள். மதத்தினாலேயே நாம் ஒன்றாயில்லை; பலகோடிக் கடவுள்கள் இந்து மதத்தினருக்குக் கற்பிக்கப்பட்டுள்ளனர். அவைகளில் யாவருக்கும் ஒன்று என்பதாக ஒன்றுகூட இல்லை. சாஸ்திரங்களின் பேராலும், வேதத்தின் பேராலும் இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஒன்றுபட்டவர்களாக இல்லை. அதைவிடுத்து, சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களாகிய நாமாவது எதனாலாவது ஒன்றுபட்டிருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. முதலாவது, வேதத்தில் இருப்பவை என்ன என்றே நமக்குத் தெரியாது. ஏனெனில், நாம் தான் வேதத்தைப் படிக்கவோ, பக்கமிருந்து கேட்கவோ கூடாதே! தெரிந்த வரை ஆபாசங்களும் கேடுகளும் அதிலிருக்கின்றன என்று கண்டிருக்கிறோமே தவிர நமக்கு முறையாக வேதம் கற்பிக்கப்பட்டிருக்கிறதா? ஏன்?
அதை நாம் பார்க்கப் படிக்க நேர்ந்தால் அதன் அசிங்கம் நமக்கு விளங்கிவிடும். அன்றியும், நம்மை இழிவுபடுத்தவும் ஒழிக்கவுமே வேதசாஸ்திரம், மதம், கடவுள்கள் இருக்கின்றனவே தவிர, அவைகளில் நம் நலத்திற்கென்று ஒன்றுமே இல்லை என்பது விளங்கிவிடும்.
சூரியன், சந்திரன், அக்கினி, இந்திரன், வருணன், ருத்திரன், அவன், இவன் என்று பெயர்களும் உருவங்களும் இருக்கின்றனவே தவிர, காட் (படின), அல்லா, கடவுள் என்பதாக ஒன்று நமக்கு இல்லை. சொல்லப்போனால், கடவுளுக்குத் தமிழில் ஒரு சொல்லே இல்லை. இந்தக் கடவுள் என்ற சொல் இடைக்காலத்தில் தமிழில் புகுந்தது தான். சரித்திரம் காணாத கால முதற்கொண்டே நாகரிக வாழ்வில் திளைத்திருந்த நாம், ஒரு பெரிய சமுதாயம் தனக்கென வேதம், மதம், கடவுள், சாஸ்திரம், கொள்கை இவைகள் இல்லாமல் அண்டிப்பிழைக்க வந்த ஒரு நாடோடிக் கூட்டத்தாரின் பிரச்சாரத் தந்திரத்துக்கு ஆளாகிக் கூத்தடிக்கிறோமே தவிர, வேதனைக்காளாகிறோமே தவிர வேறென்ன?
ஆரியர் - திராவிடர் என்னும் இரு இனப் பிரிவுகளை இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் தவிர சர்வ சகல கட்சியினரும் அமெரிக்க - பிரிட்டிஷ் வரலாற்று நூலாசிரியர்களும், இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் - பிரதம மந்திரி பண்டித நேரு உட்பட ஒத்துக் கொள்ளுகின்றனர். நாம் கூறும் ஆரியர் - திராவிடர் பிரச்சினை ரத்தப் பரிசோதனையின் விளைவாக அல்ல; கொள்கைகளினால், கலாச்சாரத்தினால், பழக்க வழக்கங்களினால், பிரிக்கப்பட்டிருக்கும் பேதத்தினால் கூறுகிறோம். மற்றபடி ஆரியரும் - திராவிடரும் பெரும் அளவுக்கு இரத்தத்தினால் கலந்துவிட்டனர் என்பதை நாம் மறுக்க முன்வரவில்லை.
ஆரியர்கள் யார்
ஆரியர்கள் என்போர் யார்? என்சைக்ளோபீடியா என்ற சர்வபொருள் விளக்க நூலும் வேத நூல்களும், ஆராய்ச்சி உண்மை ஆதாரங்களும் சொல்லுவதென்ன?
பர்ஷிய என்னும் பாரசீகத்தில் இருந்தவர்களே ஆதியில் பெரிதும் ஆரியர்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. இவர்களுக்குள் இரு கட்சிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒரே இனத்தவர் எனினும், இங்கு உள்ள சைவர்கள், வைணவர்களைப் போல,
ஒரு சாரார் தேவர்கள் என்றும், மற்றவர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களுக்குள் உயர்வு தாழ்வு கிடையாது; எனினும் கொள்கைத் துறையில் மாறுபட்டிருந்தனர். வானம், தீ முதலிய பிரகாசம் என்னும் பொருளைக் கொண்டதான வான ஒளி என்ற தத்துவத்தின் மீது தேவர்கள் வழிபாடு கொண்டிருந்தனர். மற்றவர்கள் இதற்கு மாறுபட்ட இயற்கைத் தத்துவத்தைக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு அசுரர் என்ற பெயர் இருந்து வந்தது. அசுரர்கள் மது,
மாமிசம் சாப்பிடாதவர்கள்; கொலை பலி வெறுப்பவர்கள்.
தேவர்கள் மது, புலால், ஒழுக்கக் குறைவு, கொலைத் தொழில் முதலியவைகளில் ஈடுபட்டிருப்பவர்கள்; ஆதலால், அது காரணமாக அசுரர்கள் தேவர்களை வெறுத்து விரட்டிவிட்டனர்.
வசவே வேதம்
விரட்டப்பட்டு ஓடியவர்கள், விரட்டியவர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் இழிவாகவும் பேச முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டு, வெளியேறிப் பல நாடுகளைச் சுற்றிவிட்டு, இறுதியாக இந்தி நதி (சிந்து நதிக்கரை) வந்தடைந்து, சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு, தம்மை விரட்டியவர்களை மேலும் தொடர்ந்து வசைபாடலாயினர். இந்தியாவிலும் அவர்கள் கண்ட மனிதர்கள் அவர்களது நாட்டு அசுரர்களைப் போலவே உயர்ந்த தத்துவத்தினராக இருந்து இவர்களை வெறுக்கவே, அவர்களையும் அசுரர் என்றே கருதி, அவர்களை வைவது போலச் சபிக்கும் காரியத்தை இவர்கள் மீதும் செய்து வந்திருக்கின்றனர். அந்த வசவேதான் வேதமாயிற்று.
இவ்விதம் பாரசீகத்தில் இருந்து வந்த ஆரியர்கள் இந்தியாவிலும் குடியேறிக் கண்ணுக்குக் காணும் சூரியன், சந்திரன், தீ,
தண்ணீர் முதலிய இவைகளையே கடவுள்களாக்கி, அவைகளின் எண்ணிக்கையை 33 ஆக ஆக்கினர். இவை எல்லாம் டாக்டர் முன்ஷி முதலியோர் தீட்டியிருக்கும் ஆதாரம் முதலியவைகளில் இருந்தும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த 33 கடவுள்களில் இன்று கூறப்படும் சிவன் இல்லை; விஷ்ணு என்பவனைத் தங்கள் இனப்பாதுகாப்புத் தேவனாக, ஆபத்துக்களை அகற்றக்கோரித் துதிபாடுவதற்காக ஏற்படுத்தியிருந்தனர். ருத்திரன் என்றொரு கொடுமையான குணத்தைக் கொண்ட தேவராக ஆரியர் ஒரு தேவனைக் கொண்டிருந்தனர்.
இங்கு வந்த பின்பே ஆரியர்கள் ருத்திரன் என்ற தேவனை, சிவன் என்று பெயர்மாற்றி, அதை முக்கிய தேவனாக்கி, வேதத்தில் மிகச் சாதாரண - பிந்திய தேவனாக இருந்த விஷ்ணுவையும் முக்கியத்துவம் அளித்து நாளாவட்டத்தில் அவைகளையும் கடவுள்களாக ஆக்கி வந்திருக்கின்றனர். ஆயினும், பிரம்மா என்பதாக ஒரு கடவுள் வேதத்தில் காணப்படவில்லை. இவைகளையே நாளடைவில் விருத்தி செய்து சிவனின் பிள்ளைகள் என்றும், விஷ்ணுவின் அவதாரம் என்றும் பலரை உற்பத்தி செய்து தசாவதாரம், புராணக் கதைகள் என்பவைகளையும், கடவுள்களுக்குப் புத்திரர்களையும் உண்டு பண்ணினர். இவர்களெல்லாம் கடவுள்கள் அல்லர்; பெரிதும் தேவர்களும் அல்லர்; தேவர்கள் என்றால் பிரகாசமாக வானத்தில் இருப்பது என்பது அவர்கள் ஆதாரக் கருத்து.
வேதகாலம் தெரியாது
வேதங்களுக்கும் காலம், கர்த்தா, குறிப்பிட்ட கருத்து, முதலிய எதுவுமில்லை என்கிறார்கள். வேதம் ஏற்பட்ட காலம், எழுதியவர், அல்லது ஏற்படுத்தியவர் யார் என்று ருசுப்பிக்க ஆதாரங்கள் எதுவுமில்லை; ஆனால், இப்போது கூறுகிறார்கள் காலப்போக்கில் தொகுக்கப்பட்டவை என்று. இதையே இக்காலத்தில் உலகெங்கும் நிகரற்றது; சகல மதத்தையும் தழுவியதென்கிறார்கள். சங்கரர், ராமானுஜர், மாத்துவர் உள்பட ஆஸ்திகர் நாத்திகர்களும் பிறரும் தத்தமது ஆஸ்திக நாஸ்திகமான பலவிதக் கொள்கைகளை மதங்களாக வேதத்திலிருந்தே அவரவர் கருத்துக்கேற்ப விளக்கம் தந்து அமைத்திருக்கிறார்கள். கிளைக் கடவுள்களையும் அவதாரங்களையும் கொண்ட புராண இதிகாசங்கள் யாவும் ஒரே கருத்தில்தான் அதாவது ஆரியர் திராவிடப் போராட்டத்தின் மீதே ஏற்பட்டிருக்கின்றன.
அடிமைப்படுத்தும் தத்துவமே
திராவிடர்கள் என்றென்றைக்கும் தலைதூக்காதபடி செய்யும், நிரந்தரமாக ஆரியர்க்கு அடிமைப்பட்டிருக்கச் செய்யும் தத்துவமே புராண இதிகாசங்களின் தத்துவங்களாகும். சைவம், வைணவம் எல்லாமே இதே நோக்கம் கொண்டவை. திராவிடர் ஒழிப்பே அந்த நோக்கமாகும், இங்கு கண்டவர்களையும் நமது நாட்டு அசுரர்கள் என்றே கருதி ஆரியர்கள், திராவிடர்களைச் சூழ்ச்சிப் போரில் வென்று, அவ்வெற்றி தேவர்களால் ஏற்பட்டதென்று கருதி அத்தேவர்களையே அவதாரங்களாக்கி, அவற்றை நமது கடவுள்களாக ஆக்கிவிட்டனர். நமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை அவர்கள் வெற்றி பெற்றதும் பல உருவில் கதைகளாக்கி அக்கதைகளைப் புராணங்களாக்கிவிட்டனர். அக்கதையில் வந்த பாத்திரங்கள் எல்லாம்தான் கடவுள்களாக்கப்பட்டன.
இன்று
மக்களுக்கு இன்று உணர்ச்சி வந்துவிட்டதால், ஆரியர்கள் நம்மை அசுரர்கள், ராட்சதர்கள் என்று நேரில் கூறாமல் இருக்கின்றனர்; என்றாலும் அந்த வெறுப்புடன்தான் நம்மை நடத்துகிறார்கள்.
தேவர் - ஆரியப் பார்ப்பனரே
தேவர்கள் என்னும் ஆரியர்களை அதாவது பார்ப்பனர்களைப் பற்றி அவர்கள் நன்றாக எழுதி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திராவிடர்கள் போரில் தமக்குச் செய்த கொடுமைகள் காரணமாகவே மனுதர்மம் என்பதாக தமது வகுப்புக்கு ஒரு தனி அடக்குமுறை நீதிநூல் உண்டாக்கி அதை மத ஆதாரமாக ஆக்கிவிட்டார்கள். அந்த நூலில் யாகத்தின் பெயரால் திராவிடர்களைக் கொள்ளையடி என்றும், பலாத்காரமாய் பொருளைப் பிடுங்கிக் கொள் என்றும், ஆரியர்கள் எழுதியிருக்கிறார்கள். வசதிப்பட்ட போது திராவிடர்களும் ஆரியர்களை வெளுத்திருக்கிறார்கள். இக்கால மலைவாசிகள் யுத்தமுறை போன்று என்பதும் வேதத்தினால் விளங்குகிறது.
பெண் வேடத்தில் ஏமாற்றினர்
கஷ்டங்கள் நேர்ந்த காலத்தில் எல்லாம் பெண் வேடத்தில் ஆரியர்கள் திராவிடர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். தமது இனப் பெண்களென்பதற்குப் பதிலாக சிவன், விஷ்ணு பெண் அவதாரம் என்பதாகத் திரித்து எழுதியிருக்கிறார்கள். ஆக தந்திரம், சூது காரணமாகப் பல சாதனைகளைச் செய்திருக்கின்றனர். இது சம்பந்தமான கதைகளை எழுதும்போதும் ஆபாசங்களையும் மோசமானவைகளையும் அவர்கள் செய்யத் தயங்கவில்லை, நமக்கு வணக்கம், வழிபாடு இவைகட்கு உரியதாக புராணம் கடவுள்களை ஏற்படுத்திப் பார்ப்பனர்களுக்கு என்றென்றும் சுலபமான வகையில் சுகமாக வாழ வழி செய்துள்ளனர்.
தங்களுடைய ஆபத்துக் காலத்தில் புராண தந்திரங்கள் பயன்படவேண்டிய புராணப் பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும், கடவுள்கள் திருவிழா, பண்டிகைகளாகக் கொண்டாடுமாறு செய்துவிட்டனரே அன்றி, நமக்கு என்று ஒரு தனிக் கடவுள் எதுவும் இல்லை. நம் கடவுள்கள் என்பனவெல்லாம் நம் பொருளையும் பணத்தையும் பார்ப்பனருக்குப் பிடுங்கிக் கொடுக்கவே இருக்கின்றன.
கந்த புராணமே இராமாயணம்
இன்னும் சொல்லப்போனால், கந்த புராணமே ஆரியர் திராவிடர் போராட்டத்திற்குப் பின் கற்பனை செய்யப்பட்ட முதல் கதையாகும். இதுபோலவே இராமாயணம் முதலியவையுமாகும். இராமாயணத்தில் பலவகை இராமாயணங்கள் இருக்கின்றன. அதன்படிப் பார்த்தால் இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம் என்று இரு காண்டங்களுடன் முடிகிறது. இராவணன், இலங்கை, அனுமார், சீதை, வனவாசம் முதலியன எல்லாம் அவைகளில் இல்லை. பிற்பாடு கந்த புராணத்தைப் பார்த்து விஷயங்கள் கற்பிக்கப்பட்டு அதில் சேர்க்கப்பட்டவைகளேயாகும்.
கந்த புராணத்துக்கு அந்தக் காலத்திலிருந்த செல்வாக்கைக் கண்டு, அதற்குப் போட்டியாக இருக்க, பிற காண்டங்களை இராமாயணத்தில் சேர்த்தனர். பெயர்களை மாற்றியமைத்தனரே அன்றி, மற்றபடி கந்த புராண நிகழ்ச்சிகளை - காரணக் கதைகளை அப்படி அப்படியே இராமாயணத்தில் சேர்த்துள்ளனர். இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் வரை உள்ளவை மட்டுமே இராமாவதாரச் சேதிகளாகும். இராமாயணத்தில் கந்த புராண நிகழ்ச்சிகளைக் காணலாமேயன்றி கந்த புராணத்தில் இராமாயணத்தைக் காணமுடியாது. அதனால் இராமாயணமானது கந்த புராணத்தைப் பார்த்து, பின்னிட்டு உண்டாக்கப்பட்டது என்பதில் சந்தேகமே கிடையாது. ஆராய்வரேயாயின் பண்டிதர்களுக்கே இந்த உண்மை நன்கு தெரியும்.
ஆச்சாரியாரே கூறட்டும்
சிவன் - விஷ்ணு அவதாரங்கள் யாவும் ஆரியர் - திராவிடர், தேவர் - அசுரப் போராட்ட அடிப்படையில், ஆரியர் - தேவர் பாதுகாப்புக்கென, திராவிட அசுரர்களைக் கொன்று உண்டாக்கப்பட்டவையேயாகும். ஆக எல்லாம், இந்த ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பதாக இருக்கிறதேயன்றி, நமக்குக் கடவுளெனயாதிருக்கிறது? கடவுளின் பிரதிநிதியாக வக்காலத்து வாங்கிக் கொண்ட தன்மையில் பேசிவரும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தான் கூறட்டுமே!
நம்மைப் பார்த்துப் பலர், ஆபாசங்களை மட்டும் காண்கிறீர்களே நல்லவைகள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை என்கிறார்கள். நல்லது ஏதேனும் இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் - தெரிவியுங்கள் என்றால் யாரும் வாய்கூடத் திறப்பதில்லை. ஆபாசங்களை நீக்கி எழுதுங்களேன் என்றாலும் எதுவும் பேசுவதில்லை.
ஆறுமுகம் பிறப்பு
ஆறுமுகம் என்னும் சுப்பிரமணியக் கடவுளின் பிறப்புப் பற்றி கந்தபுராணத்தில் கூறப்பட்டிருப்பதைத்தான் பாருங்கள். தேவர்கள், தங்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுத்து வருவதாகவும், அசுரர்களை அழிக்க வழி செய்தாக வேண்டும் என்றும் சிவனார் என்னும் கடவுளிடம் முறையிட்டார்களாம். சிவனாரும் ஒரு புத்திரனைத் தோற்றுவிக்க வேண்டித் தமது தேவியார் பார்வதியுடன் கர்ப்பகோடி ஆண்டு கலவி செய்தாராம். இவர்களது கலவிக் காலம் கழிந்து அவதாரம் தோன்று முன் தேவர்கள் - அசுரர்கள் பேதமே தெரியாதொழிந்து விடுமே என்று அஞ்சி, தேவர்கள் சிவனாரை அணுகிக் கலவியை நிறுத்துமாறு வேண்டினராம். கலவியை இடையில் நிறுத்துவதாயின் வெளிப்படும் இந்திரியம் என்னாவது என்று சிவனார் கேட்கத் தேவர்கள் தாங்கள் ஆளுக்குச் சிறிதளவாக உட்கொண்டு விடுவதாக ஒப்பி அவ்விதமே செய்ய, அதன் பயனாக, தேவர்கள் அனைவரும் கருவுற்றனராம்! ஆண்கள் இந்திரியத்தை வாய் வழியாக உட்கொண்டு கருவுற்றனராம்! தேவர்கள் எதிர்பாராத இவ்விளைவைக் கண்டு அஞ்சி மறுபடியும் சிவனாரையே அணுகித் தமது கருக்கலைய வழி கேட்டனராம். அவரும் ஒரு குளத்தைக் காட்டி அதில் நீராடச் சொன்னாராம்; தேவர்கள் அவ்வாறே செய்து தமது கர்ப்பத்தைக் குளத்தில் சிதைத்துக் கொண்டனராம்; இவ்விதம் சிதைவான கருப் பாகங்கள் குளத்தில் ஆறு குழந்தைகளாகினவாம். அவைகளைச் சிவனார் ஒன்றுபடுத்தி ஆறுமுகம் என்றாக்கினராம். இவனே பிற்காலத்தில் சூரபத்மன் என்ற திராவிட அரசனைச் சூதினால் அழித்தான் என்று புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.
எல்லாம் ஆபாசக் கதைகள்
இப்படியாகப் புராணங்கள் ஒவ்வொன்றிலும் ஆபாசக் கதைகள் நிரம்பியுள்ளன. பாகவதம் முதலிய பிற்பட்ட காலத்திய நூல்களில்தான் என்ன ஒழுக்கமிருக்கிறது? ஆக ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சமாளிக்க அவ்வப்போது ஏதேதோ செய்து இருப்பதாகவே அறிகிறோம்.
மச்சாவதாரம்
தசாவதாரங்களுள் முதலாவதாகச் சொல்லப்படும் மச்சாவதாரத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்; வேதத்தை யாரோ ஒரு அசுரன் சுருட்டி எடுத்துச் சென்று சமுத்திரத்துள் மறைத்துவைத்து விட்டானாம். அதை மீட்டுவர விஷ்ணு மீன் அவதாரமெடுத்தாராம். வேதத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தான் அசுரன் என்றால் என்ன பொருள்? அந்த நாட்களில் காகிதம், ஓலைச்சுவடி, அச்சுக்கூடம், அல்லது பேனா, பென்சில் எதுவும் கிடையாது. அதனாலே வேதம் புத்தகமாக அல்லது ஓலைச்சுவடியாக இருந்திருக்க முடியாது. அப்படியானால் அதை எவ்வாறு தூக்கிச் சென்று மறைத்திருக்க முடியும்? வேதம் அந்நாட்களில் வெறும் வாய்ச்சொல்லாக உள்ளத்திலே இருந்த ஒரு பொருளாகவே இருந்து வந்தது. அதை மறைப்பதெப்படி? அதாவது, வேதப் பிரசாரம் கூடாது என்பதாக திராவிட அரசன் ஒருவன் கண்டித்து ஆட்சேபித்திருக்கவேண்டும். அதற்குத் தடுத்தான் என்றுதானே பொருள்; தந்திரமாக அவ்வரசனை அசுரனாக்கிக் கொலை செய்து, வேதத்தைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். ஆகவே, அந்தக் காலத்திலேயே வேதத்திற்குச் சரியான, சட்ட விரோதமாகக் கூட எதிர்ப்பும் இருந்திருக்கிறது.
வராகவதாரம்
வராகவதாரத்தின் லட்சணத்தைப் பார்த்தாலும் ஆபாசம் புரிகிறது. பூமியை அதாவது உலகைப் பாயாகச் சுருட்டி ஒரு அசுரன் கடலுக்குள் ஒளிந்து விட்டானாம். பூமியின் வடிவம் உருண்டை என்பதாகச் சில நூல் வல்லுநர்கள் கண்டிருக்கின்றனர். அப்படியானால் பூமியைச் சுருட்டுவதெப்படிச் சாத்தியமாகும்? மேலும், எங்கிருந்து கொண்டு சுருட்டினான்? சுருட்டியவனும் பூமிக்குள் அகப்பட்டிருக்க வேண்டுமே! சுருட்டியதைக் கடலுக்குள் ஒளித்து வைத்தானாம். பூமி அல்லது உலகம் எனும்போது கடலும் அதிலடங்கியது என்பதைப் புராணம் எழுதியவன் மறந்திருக்க வேண்டும் அல்லது அறியாதிருக்க வேண்டும்.
மற்றவை
அதேபோலத்தான் நரசிம்மன், பரசுராமன், பலராமன், இராமன், கிருஷ்ணன் முதலிய அவதாரங்களும் இருக்கின்றன.
பரசுராமன், இராமன் இவ்விரு அவதாரங்களும் ஒரே கடவுளின் அவதாரங்களெனப்படும். இவை ஒரே காலத்தில் இருந்து ஒன்றை இன்னொன்று எதிர்ப்பதும், போரிட்டுத் தோற்கடித்ததுமாக எழுதப்பட்டுள்ளது. இதேபோலப் பரசுராமன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய மூன்று அவதாரங்களும் ஒரே காலத்தில் இருந்து செயல் புரிந்ததாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.
வேத எதிர்ப்பு
சுருக்கமாகச் சொல்லப்போனால் வேத எதிர்ப்பு என்ற சங்கதி தோன்றியது இன்று நேற்றல்ல. ஈரோட்டு ராமசாமியும், திராவிடர் கழகமும் தோன்றிய காலத்திலல்ல; புராண காலத்திலேயே வேதம் வெறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. மற்றபடி, வேதத்தை ஏன் படித்தாய்? என்ன படித்தாய்? என்பது அக்காலத்தே தெரியாது. காரணம், அது குறிப்பிட்ட ஒரு வகுப்பாரிடையே வாய்மொழியாக, உள்ளத்தில் ஒரு கருத்தளவிலேயே இருந்து வந்திருக்கிறது என்றாலும், இராவணன், இரணியன் ஆகியோர் வேதத்தை முழுவதும் படித்ததினாலேயே அவர்கள் வேதத்திற்கும் யாகத்திற்கும் தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் விரோதிகளானார்கள் என்பதாகத் தெரிகிறது. இக்காலத்திலேயும் வேதப் பாதுகாப்புக்கென தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும், வக்கீல் வெங்கட்ராம சாஸ்திரியாரும், சர்.சி.பி.ராமசாமி அய்யர், ஜட்ஜ் ஏ.எஸ்.பி.
அய்யர் போன்றோரும் முன் வருகின்றார்கள் என்றால், சுயமரியாதை இயக்கம் வேதத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன பிறகுதான். வேதம் எப்படி, எதற்காக ஏற்பட்டது என்று திராவிடரில் யார் ஆராய்ச்சி செய்தார்கள்!
எந்த மொழியில்?
எந்த மொழியில் வேதம் ஓதப்பட்டு வந்தது என்றே சொல்ல முடியாது. சமஸ்கிருத மொழியே வேதகாலத்தில் கிடையாது. சமஸ்கிருதம் என்று தனிமொழியே இருந்ததில்லை. அந்தக் காலத்திலே ஆரியர்கள் பேசிக் கொண்டிருந்த மொழி பலமொழி, மலைவாசி மொழிகள். அப்படிப்பட்ட சகல மொழிகளையும் கிரமப்படுத்தி அதைச் சமஸ்கிருதம் - சம்ஸ்தத்தையும் ஒன்றாக்கிய மொழி என்றாக்கினார்கள். சமஸ்கிருதம் என்ற பதத்துக்கு அர்த்தமே அதுதான். அப்படிச் செய்யும் போது திராவிட மொழிகளிலிருந்தும் பல சொற்களை ஆரியர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால், அச்சொற்களின் ஒலியை மட்டும் சிறிது மாற்றியமைத்துத் தனிமொழி போலத் தோன்றுமாறு செய்துவிட்டனர் என்பதாக என்சைக்ளோபீடியா என்னும் சர்வ பொருட் களஞ்சியம் கூறுகிறது.
தமிழ்ப் புலவர்கள்
இங்குள்ள நமது தமிழ்ப் புலவர்கள் எனப்படுவோர் தமிழைப் பிழைப்புக்காகக் கற்று வைத்துக் கொண்டு பாடுபடுகின்றனரே அன்றி, தமிழ்மொழி வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சிக்கென இம்மியும் காரியத்தில் இறங்கியது கிடையாது. தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் என்பதாகத் தமிழிலும் கடவுள் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் அவைகளும் வேதத் தேவர்களைக் கடவுளாகக் கொண்டு, பிரார்த்தனைப் பாடல்களாகப் பாடப்பட்டிருக்கின்றனவே அல்லாது தமிழர்களுக்கான கடவுள்களைக் குறித்து ஒரு சொல்லும் கூறுவதில்லை!
அகஸ்தியனைப் பற்றிய கூற்று
தமிழ்மொழி ஏற்பட்டதே அகஸ்தியன் என்னும் ஒரு குறுமுனிவனால் என்றும் சொல்கிறார்கள். இது ஒரு சிறிதும் உண்மையல்ல என்பதோடு தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் வெட்கக்கேடு ஆகும். அகஸ்தியன் ஆரியக் கதைப்படி ஒரு ஆரியனாகும். ஆரியத்தைத் தெற்கே புகுத்த வடக்கிலிருந்து அனுப்பப்பட்டவன். அதாவது, சிவனாருக்கும் உமையாளுக்கும் திருமணம் இமயமலையில் நடைபெற்றபோது தென்னாடு உயர்ந்து விட்டது என்று தேவர்கள் புகார் உரைத்தனராம்; தேவர்கள் என்றால் ஆரியர்கள் - பார்ப்பனர்கள்தாம். தென்னாடு உயர்ந்துவிட்டது என்றால், தென்னாட்டு மக்கள் ஆரியச் சூழ்ச்சிப் புராணக் கதைகளில் சிக்கிச் சீரழியாது முன்னேற்றமடைந்துவிட்டனர் என்பதாக அர்த்தம். தெற்கே யாரையாவது அனுப்பி உயர்ந்து விட்டவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்பது ஆரியரது விருப்பம். இதற்குத் தகுந்த நபராக அகஸ்தியன் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர் என்பதாக கந்தபுராணம் கூறுகிறது.
இந்த அகஸ்தியன் தெற்குநோக்கி வரும்போதே அப்போதைய எல்லைப் பகுதியான விந்தியமலைக்கருகில் ஆரியர் பிரவேசத்தையும் ஆரிய மதப் பிரச்சாரத்தையும் தடுத்தொழித்து வந்த வாதாபி வில்வலன் என்ற இரு திராவிட அரசர்களை இந்த அகஸ்தியன் என்பவன் சூழ்ச்சியால் வென்று கொன்றிருக்கிறான் என்று கூறப்பட்டிருக்கிறது. தென்னாடு சென்று இராவணனைக் கொன்றுவா என்றே அகஸ்தியனுக்குக் கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இராவணன் யார்? இராமாயண இராவணனா அல்லது வேறொருவனா என்பது தெரியவில்லை. இவ்வாறாக, அகஸ்தியன் தென்னாடடைந்தும், தமிழ் நூல்களையெல்லாம் ஒழித்து ஆரிய மயமாக்கிவிட்டான்.
ஒரே வார்த்தையில் சொன்னால், திராவிடர்களைக் கொன்று குவித்து அழிக்கவே வேதமும் மதமும் கடவுள்களும் பயன்பட்டு வந்திருக்கின்றனவே அன்றி இவைகளினால் என்ன உருவான பலன் ஏற்பட்டிருக்கிறது?
புராண விஷம்
இவைகளை எல்லாம் நீங்கள் ஊன்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? மனதில் பல தலைமுறைகளாகப் படிந்துவிட்ட களிம்பை - புராண விஷயத்தை நீக்கிக் கொள்ளாவிடில் நாம் எவ்வகையிலும் வாழமுடியாது. வேத மத புராணக் கடவுள்கள் பற்றிய ஆபாசக் கருத்துக்களை மனத்திலிருந்து அகற்றினாலன்றி சிறிதும் முன்னேற்றமடைய முடியாது. இவைகளே நமது வாழ்வுக்கு வளப்பமாக முடியாது. நம் பெண்களுக்கும் அறிவு - பகுத்தறிவு ஏற்பட வேண்டும். கடவுள், தேவங்களினால் நமக்கு இதுவரை ஏற்பட்ட நன்மைதான் ஒரு துளியேனும் என்ன? துன்பங்கள், தாழ்வுகள் தவிர வேறென்ன கண்டோம்?
விபசாரம் - மோசடி - கொள்ளை
விபசாரம், மோசடி, கொள்ளை இவைகளைத்தானே வேதங்களும், மதங்களும் கடவுள்களும் போதிக்கின்றன. ஒரு அங்குலமாவது, இவைகளைக் கொண்டு நாம் முன்னேற முடிந்ததா? ஏமாற்று வேஷம் போட்டுப் பிழைக்கலாம். ஏமாற்றுவேஷம் வெளிப்படின் உதைபடலாம் என்பது தவிர வேறெந்த வகையிலாவது முன்னேற்றத்துக்காக நாம் கண்ட மார்க்கமென்ன? திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளுவோரில் பெரும்பாலோர் இன்னும் வேஷதாரிகளாகத்தானே இருந்து வருகிறார்கள்? யாரும் காணாதபோது விபூதி பூசுவது, வெளியே வரும்போது அழித்து விடுவது, உருவக்கோவில்களுக்குச் செல்லுதல், திருவிழா, பண்டிகை கொண்டாடுதல் இவைகளை இன்னும் அனுஷ்டித்து வருகிறார்கள் என்றால் மற்றவர்கள் சங்கதியை நாம் எப்படிக் குறை கூற முடியும்? இதற்கு நிவாரண வழிதான் என்ன?
பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை தப்பினாலும் தப்பலாம்; வேதம், மதம் கடவுள் ஆகிய இந்தப் பாம்புகளின் பிடிப்பில் விழுந்தால் தப்ப முடிவதில்லையே!
உலக அறிஞர்கள் ஏன் உலக அறிஞர்கள், நிபுணர்கள் என்று படிப்புக் காரணமாக, அறிவுத் திறமை காரணமாகப் பாராட்டப்படும் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார், ஏ.ராமசாமி முதலியார், ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் இவர்களால் இந்தப் பிடிப்புகளில் இருந்து இம்மியும் விலக முடியவில்லையே! திராவிடர் கழக அனுதாபிகள் எனப்படும் இவர்களது போக்குகளும், புத்தியுமே இப்படி என்றால் சாதாரணமாக இருப்பவர்களைப்பற்றி என்ன சொல்லமுடியும்? நம்முன் கற்றவர்கள் எனப்படுவோர்க்குத் தேர்தல் என்றால், எதை விட்டுக்கொடுத்தேனும் கொள்கை, மனசாட்சி, நேர்மை இவைகளில் எதைப்பற்றியும் கவலைப்படாது, எப்படியாவது தேர்தலைச் சமாளித்தாக வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்றாகவேண்டும் என்றுதானே தோன்றுகிறது? நல்லதொரு சமுதாயம் அநியாயமாக, வீணாகக் கெட்டுப்போகிறதே என்று யார் கவலைப்படுகிறார்கள்?
மாற்ற வேண்டும்
இவைகள் எல்லாம் அதாவது வேதம், மதம், புராண, கடவுள் பற்றிய, நமது பழங்கால முதற்கொண்டு இருந்து வரும் மனப்பான்மை, அடிமைப்புத்தி மாற்றமடையவேண்டும்; இவைகள் தானே இலக்கியம், நாடகம், சினிமா முதலிய எல்லாத் துறைகளிலும் புகுந்து பெரும் இடையூறாக இருந்து வருகின்றன? ஆகவேதான், மாற்றம் வேண்டும் இல்லையேல் முன்னேற்றத்திற்கு மார்க்கம் இல்லை என்று கூறுகிறேன்.
மற்றபடி, எனக்கு வேறு யாருடனும் விரோதமே கிடையாது. வேதம், மதம், புராணம், கடவுள்கள் இவைகளினால் என் மக்கள் நாசமாகி வருகிறார்கள், இழிவுபடுத்தப்படுகிறார்கள், அடிமைப் படுத்தப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள் என்று கூறுகிறேன். இவ்விதம் நான் சொல்லுவதும் அதற்காக ஏதோ என்னால் முடிந்த அளவு செயலாற்றுவதும், செயலாற்ற மக்களிடை பிரசாரம் செய்து தூண்டிவிடுவதும் பிடிக்கவில்லையானால், தோழர் ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் சொல்லட்டுமே ஒரே வார்த்தை ஆரிய வேதம், மதம், புராணம், கடவுள்கள் இவைகளுக்கும் திராவிட மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று. அதைவிடுத்து பிரசாரத்தின் மீது காய்வார்களேயானால், இனியும் நாம் சும்மா இருப்பதில் பயனில்லை. மாதம் ஒருபடி முன்னேற்றம் கண்டோம் என்ற முறையில், மாதமொரு பண்டிகை திருவிழா என்றிருப்பதுபோல் மாதம்தோறும் ஏதேனும் ஒரு புராணத்தை எரித்தல், விக்கிரகத்தை உடைத்தல் முதலிய நடவடிக்கைகளில் இறங்கியே ஆகவேண்டும்.
நம்மீது புகுத்தப்பட்ட புராண நூல்களை எரிப்பதாலும், விக்கிரகங்களை உடைப்பதாலும் புராணங்கள் அனைத்தும் அழிந்துவிடும். விக்கிரகங்கள் கூண்டோடு மறைந்துவிடும் என்று நான் கூற வரவில்லை. இதைப் பார்த்த மக்களுக்கு, ஏன் எரிக்கிறார்கள்? ஏன் உடைக்கிறார்கள் என்ற கேள்விகள் பிறக்கும். அதுசமயம் புராணக் கடவுள்களின் ஆபாசங்களை எடுத்துரைத்து, இவைதானா எங்களுக்கு வழிபாட்டு நூல்களும், கடவுள்களும் என்போம் - விமோசனம் பிறக்காது போகுமா பார்ப்போம்.
தோழர்களே! நான் இதுவரை சொன்னதில் ஏதாவது, சிறிதாவது நியாயம் உண்மை இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றினால், உங்கள் வீட்டில் மாட்டியிருக்கும் கடவுள்களின் உருவப்படத்தை எடுத்து எறியுங்கள்! நெற்றியில் சாம்பல் மண் இடாதீர்கள்! உருவக் கடவுள் உள்ள கோவில்களுக்குச் செல்லாதீர்கள்! துரோகம், வஞ்சகம் செய்யாதீர்கள்! உண்மை பேசுங்கள்! மக்களை ஏய்க்காதீர்கள்! அதுதான் கடவுள் தொண்டு!
நூல் - புரட்டு இமாலய புரட்டு
ஆசிரியர்- தந்தை பெரியார்
Comments
Post a Comment