மதமும் விஞ்ஞானமும் - அத்தியாயம் 2
அத்தியாயம் 2
மனிதர் சற்று நாகரிகம் அடைந்தவுடனே பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றியும்,
ஜீவராசிகள் உண்டான விதத்தைப்பற்றியும்,
மனிதன் எப்படித் தோன்றினான் என்பதைப்பற்றியும், அவன் இறந்த பிறகு அடையும் கதியைப்பற்றியும் எண்ணுகிறார்களென்று முன் அதிகாரத்தில் சொல்லப்பட்டது.
எல்லா எழுத்துகளுக்கும் எப்படி அகரம் முதலாக இருக்கிறதோ, அதே மாதிரி கடவுள் இப்பிரபஞ்சத்திற்குக் காரணமாக இருக்கிறார் என்றும், தனிமையையும், இச்சாரமாத்திரமாயும் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள சராசரங்களாகிய தேவர், மக்கள்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம் முதலியவைகளையும், உலக விருத்திக்காக வேண்டிய எல்லாப் பொருள்களையும் அவரே சிருஷ்டித்தாரென்றும் பல மதஸ்தர்களும் கூறுகிறார்கள்.
ஆனால்,
விஞ்ஞான சாஸ்திரமோ பிரபஞ்சத்திற்கு முதல்வன் உண்டென ஒப்புக்கொள்ளாது. பிரபஞ்சமும் அதிலுள்ள சராசரங்கள் யாவும் இருக்கும்போது இருப்பதைப்போல் இருந்ததில்லையென்றும், அய்ந்தாறு நாள்களில் பிரபஞ்சம் இப்போதுள்ள கோலத்தை அடையவில்லையென்றும், அநேக நூற்றாண்டுகளுக்குப் பின்னும்,
காலாந்தரத்திலும் சிறுகச் சிறுகப் பற்பல மாறுதல்கள் அடைந்து ஒன்றிலிருந்து மற்றொன்று விகாரப்பட்டுத் திருஷ்டாந்த நியாய ஆதாரங்களால் உள்ளது சிறந்து (Evolved) விளக்கிக் காட்டுகிறது.
நியாயமாக இவ்விஷயத்தை நிரூபிப்பதற்கு முதல் முதல் அனிந்திரிய (Inorganic World- தாதுரூபமற்ற)
உலகத்தைப்பற்றிச் சற்றுக் கவனிப்போம்.
இராத்திரி காலத்தில் வானத்தைப் பார்க்க மூன்று அல்லது நான்காயிரம் நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு நட்சத்திரமும் சுமார் 30 கோடி மைல் சுற்றளவு உடையதாய்ப் பிரகாசித்துக் கொண்டு விளங்கும்.
ஒவ்வொன்றும் சுமார் 300 கோடி மைல் தூரத்திலிருக்கின்றது. எவ்வளவு சக்தியுள்ள தூரதிருஷ்டிக் கண்ணாடியைக் (Telescope)
கொண்டு ஆகாயத்தை நோக்கினாலும்,
கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். மேலும், நமக்குத் தெரியாத நட்சத்திரங்கள் எத்தனையோ கோடிக்கணக்காய் இருக்கின்றனவென்றால்,
பிரபஞ்சத்தின் அளவை யார்தான் சொல்லமுடியும்? ஆகையால், வான சாஸ்திரிகள் பிரபஞ்சம் எல்லை அற்றது என்பார்கள். இடமுடிபும், காலமுடிபும் இல்லாதது இவ்வுலகம். எல்லையற்றதை ஒருவராலும் படைக்க முடியாது. ஆகையால்,
பிரபஞ்சத்திற்குச் சிருஷ்டி கர்த்தா உண்டெனக் கூறுவது தவறேயாம்.
பிரபஞ்சமானது சடசக்தி (Matter
& Force) சொரூபமாக இருக்கிறது.
சடத்துடன் சக்தி எப்போதும் சேர்ந்தேயிருக்கும். சக்தியில்லாமல் சடமில்லை; சடமில்லாமல் சக்தியில்லை.
சடத்தினுடைய முழு இயற்கை (Ultimate Nature) என்னவென்று நமக்குத் தெரியாவிட்டாலும்,
அதனிடத்தில் நிகழும் செயலைக் கொண்டு அதன் இயற்கையை ஒருவாறு யூகிக்கலாம். சடப்பொருள் மூன்றுவிதமான நிலைமையில் இருப்பதோடு,
சற்றேறக்குறைய
80 பூதங்களாகக் காணப்படுகின்றது. அதாவது பிராணவாயு, ஜலவாயு, உப்பு வாயு என்னும் வாயுரூபமாகவும்,
புரோமின் என்னுந் திரவப் பொருளாகவும், அயன், பொன், ஈயம் என்ற உலோகங்களாகவும் இருக்கின்றன. இவ்வுபாதாள பூதங்கள் வெவ்வேறு விதமாய் ஒன்றோடொன்று பவுதிகமாய்க் கூடிய பல கூட்டுப் பொருள்களைத் தருகின்றன.
ஒவ்வொரு சடப்பொருளையும் சிதைத்தால்,
அது கட்புலனுக்குத் தெரியாத அணுவாகும். அதையும் பின்னப்படுத்தினால்,
அவைகள் பரமாணுக்களாகும் (Atoms).
இவைகளையும் துண்டித்தால், எலக்ட்ரான் (Electron) என்று சொல்லப்பட்ட இன்னும் அதிசூட்சுமமான அணுக்கூட்டங்களாக இருக்கின்றன. இந்த அணுக்கூட்டங்கள் சட்டமென்றாவது, சக்தியென்றாவது சொல்ல முடியாதவையாயிருக்கின்றன.
இவைகளே ஈதருக்கும் மற்றுமுள்ள சடப்பொருள்களுக்கும் அடிப்படையாய் இருக்கின்றன. ஜலவாயுவின் (Hydrogen) ஒரு பரமாணுவாம். 16,000 எலக்ட்ரான் கொண்டது ஒரு சோடியம் (Sodiumatiom) அணுவாம், ரேடியம்
(Radium) என்று சொல்லப்பட்ட விலையுயர்ந்த ஓர் உலோகத்தில்
1,60,000 எலக்ட்ரான் உள்ளனவென்று தெரிகிறது.
இப்படியே பற்பல எலக்ட்ரான் கூட்டங்கள் சேர்ந்து, ஜலவாயுவாகவும்,
காந்தமாகவும்,
பொன்னாகவும்,
ரேடியமாகவும் முறையே உண்டாயினவென்று இரசாயன (Chemists)
சாஸ்திரிகள் தீர்மானித்திருக்கிறார்கள். இதனால், எல்லா சடபதார்த்தங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையன என்று நன்றாக விளங்கும்.
மூன்று விதமான நிலைமையிலிருக்கும் சடத்தைத் தவிர, ஈதர்
(Ether) என்று சொல்லப்பட்ட அதிநுட்பமானதும்,
சூட்சுமமானதுமான சடம் அதிவிரைவாக எல்லாப்பக்கங்களிலும், உலாவிக் கொண்டிருக்கிறது. அதை நாம் பார்க்க முடியாவிட்டாலும்,
அதன் நிகழ்ச்சியை (Exsistence)
யூகிக்கலாம்.
அது ஒரு சடத்திற்கும் மற்றொரு சடத்திற்குமுள்ள கவர்ச்சி (Gravitation) நுட்ப பரமாணுவாகி, ஈதரின் வழியாகத்தான் செல்லுகிறது. கம்பியில்லாத் தந்தியில்
(Wireless Telegraphy) நாம் பேசும் வசனங்கள் ஈதரின் வழியாகத்தான் செல்லுகிறது.
சப்தமும்
(Sound) வெளிச்சமும்
(Light) அதன் வழியாகவே செல்லுகின்றன.
ஒரு சடப்பொருள் மற்றொன்றாக மாறுமே தவிர, அதை நூதனமாக ஆக்கவும் (உண்டு பண்ணவும்) அல்லது அடியோடு அழிக்கவும் யாராலும் முடியாது. ஒன்று மற்றொன்றாக மாறுவதற்குச் சக்தி மற்றொரு சக்தியாக மாறுமென்று யாவருக்கும் தெரிந்த விஷயமே (Mechanical Force) எங்ஙனமெனில்,
ஸ்தூல சக்தி சூடாகவும்,
சூடே வெளிச்சமாகவும் மாறும். இதுவே பிறகு மின்சாரமாகவும்
(Electricity) மாறும்.
மின்சாரம் சூடாகவும், வெளிச்சமாகவும், சப்தமாகவும் தோன்றும்.
ஆனால்,
புதிதான
(உலகத்தில்லாத)
ஒரு நவீன சக்தியை உற்பத்தி செய்யவும் அதை அடியோடு சங்காரஞ் செய்யவும் யாராலும் முடியாது. பிரபஞ்சத்திலுள்ள மொத்த சடப்பொருளும்,
மொத்த சக்தியும் அதிகப்படுவதும் குறைவுபடுவதும் கிடையாது. அதாவது பிரபஞ்சம் என்றும் உள்ளது (Eternal).
எல்லை அற்றதும் என்றுமுளதுமாகிய இப் பிரபஞ்சம் ஒருவரால் சிருஷ்டிக்கப்படவில்லையென்றால்,
எப்படித்தான் உண்டானது? இதைப்பற்றித் திட்டமாகச் சொல்ல முடியாமற் போனாலும் ஒருவாறு உத்தேசித்தறியலாம்.
சுமார்
100 கோடி வருஷங்களுக்கு முன், நாமிருக்கும் இந்த இடத்தில் அதி நுட்பமான அணுக்கள், மேகம்போல் பரவியிருந்திருக்கின்றன.
இவற்றுக்கு நெபுலி (Nebulae) என்று பெயர்.
இவைகளிடமிருந்த இயற்கைச் சக்தியால்.
இவை ஒன்றோடொன்று அதிவேகத்துடன் மோதியும், சுருங்கியும், துண்டு துண்டுகளாக உடைந்தும், தன்னைத்தான் சுற்றிக்கொண்டும்,
ஆகர்ஷணம்
(Gravitation) என்னும் கவர்ச்சியால் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டும் இடத்தை விட்டு இடம் பெயராமலும், ஆகாயத்தில் அந்தரமாய்த் தத்தமது அயனநிலையில் நிற்கிறது போல் நமது பார்வைக்குக் காணப்படுகின்றன. இப்படி அணுக்களின் சேர்க்கையால் திரண்டுருண்டு,
நெருப்புக் கோளவடிவமாய் உண்டான ஓர் உலகத்திற்குக்குரிய சூரிய மண்டல (Solor System) மென்று சொல்லுவார்கள். அளமிட்டுச் சொல்ல முடியாத பிரமாண்டமான தீமண்டலத்தினின்று சிதறுண்ட ஒரு பெரியதுண்டே இப்போது நமக்கு உஷ்ணத்தையும், வெளிச்சத்தையும்
கொடுத்துக்கொண்டு நிற்கும் சூரியன், சூரியனும் மற்ற நட்சத்திரங்களைப்போல எரிந்து கொண்டிருக்கிற ஒரு நெருப்புக் கோளமே இதனைச் சுற்றிக் கிரகங்களும், சந்திரன்களும், வால் நட்சத்திரங்களும் (ஊடிஅநவள) ஓடிக் கொண்டிருக்கின்றன. இச்சூரியன் இன்னும் குளிர்ந்து போகாமல் சிறிது சிறிதாகச் சுருங்கிக் கொண்டே வருவதனால், நமக்கு உஷ்ணம் தோன்றுகிறது. சூரியனைச் சுற்றி வட்டமிடும் நூற்றுக்கணக்கான சிறு நெருப்புக் கோளங்களில் சில அதிசீக்கிரம் மேற்புறம் குளிர்ந்து உயிர் வர்க்கம் உண்டாவதற்கு இடம் ஏற்பட்டது.
நாம் வசிக்கும் உருண்டை வடிவமான இப்பூமியும் அப்படியே குளிர்ச்சியடைந்து உயிர் வர்க்கம் தோன்ற இடமானதொன்றாகும்.
அங்காரகன்
(Mars) என்னும் மற்றொரு கிரகம் நமது பூமி தீக்கோளமாகவிருந்து குளிர்வதற்கு முன் குளிர்ச்சியடைந்ததாகவும்,
அதில் உயிர் வர்க்கங்கள் ஜீவிக்கின்றனவென்றும் வான சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்.
குரு
(Jupiter), சுக்கிரன்
(Venus) என்னும் கிரகங்கள் இன்னும் கொஞ்சம் சூடாகவும் பிரகாசித்துக் கொண்டும் இருக்கின்றனவென்றும், பல ஆண்டுகள் சென்றால் அவைகள் தகுதியான குளிர்ச்சியடைந்த உயிர்வர்க்கங்கள் தோன்ற ஏதுவாகுமென்றும் தீர்மானித்திருக்கிறார்கள். இப்பூமி ஒரு காலத்தில் நெருப்புக் கோளமாக இருந்ததென்பதற்குச் சாட்சி என்னவென்றால், இன்றும் பூமியின் மத்தியில் கொதித்துக் கொண்டிருக்கிற ஆவியும், தீக்குழம்பாகிய திரவப் பொருளும் காணப்படுவதாம். சில இடங்களில் பூமிக்குள் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள் திடீரென வெளிப்பட்டுப் பூமியில் வெடிப்புகள் உண்டாகின்றன. பூமியைத் தோண்டினால்,
மண்ணுள் உலோகங்கள் பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று கலந்திருப்பதைக் காணலாம்.
பூமிக்குள் தீக்குழம்பாய்க் கொதித்துக் கொண்டிருக்கிற திரவப்பொருள் ஒரு பக்கம் சுருங்க, அது மற்றொரு பக்கம் விரிந்து கிளம்பும். இப்படிப் பூமி மட்டத்துக்குமேல் உயரமாகக் கிளம்பி இறுக்கப்பட்டவைகளே குன்றுகளும், மலைகளுமாய் இப்போது தோன்றுகின்றன. அளவிடுவதற்கு முடியாத உஷ்ணத்துடன் எரிந்து கொண்டிருந்த கோளங்களில் மேற்சொன்ன அணுக்கள் வடிவான பூதங்களும்,
எலக்ட்ரான் அணுச்சக்தி ரூபமாக இருந்திருக்கின்றன. அதிக லேசாகவுள்ள பூதங்கள் (எலக்ட்ரான்கள்) அந்நெருப்புக் கோளத்தின் வெளிப்புறத்தில் உலாவிக் கொண்டிருக்கும் அதிக லேசான பூதங்கள் யாதென்றால், பிராணவாயு (Oxygen)
ஜலவாயு
(Hdrogen) உப்பு வாயு (Nitrogents) என்பனவாம். தீக்கோளத்தின் உஷ்ணம் குறைந்தவுடனே ஜல வாயுவும் பிராண வாயுவும் தோன்றுகின்றன. அவ்விரு வாயுக்களும் கூடி, கொதிக்கும்படியான வெந்நீர் உண்டாகியது. இப்படி உண்டாகிய வெந்நீர், மழைபோல் இரவும் பகலும் பெய்து, கடலாகத் திரண்டு பிறகு குளிர்ந்து தண்ணீரானது.
மிகுதியாகிய பிராண வாயுவும் உப்பு வாயுவும் சேர்ந்துதான் நாம் உட்கொள்ளும் காற்றாயிற்று.
இவ்விஷயங்களைப்பற்றித் தெரிந்துகொள்ளப் பிரியப்படுவோர் பூகோள, பூதத்துவ சாஸ்திரங்களில் விளக்கமாகக் காண்க.
இந்தச் சூரிய மண்டலம் பிரபஞ்சத்தின் மத்தியமன்று.
ஆனால்,
ஒரு மூலையிலிருக்கிற ஒரு சிறு துணிக்கையாம்.
இதைப்போல அநேக உலகங்கள் உள்ளனவென்றும், அப்போதைக்கப்போது வெவ்வேறு உலகங்கள் தோன்றுகின்றனவென்றும் வான சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்.
அநேக நட்சத்திரங்கள் தீச்சுடர் தணிந்து இறந்து போயினதாகவும், இப்போது பிரகாசித்துக் கொண்டிருக்கிற சூரியனும் வயோதிகப் பருவத்திலிருப்பதாகவும்,
சில கோடி வருஷங்களுக்குப் பிறகு இச்சூரியனும் குளிர்ச்சியடைந்து இறந்து போவது நிச்சயமென்றும் சொல்லுகிறார்கள்.
சுக்கிரன் என்னும் வெள்ளியைப்போல் நீல வெண்ணிறமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் (Blue
White Stars) குழவிப் பருவத்திலிருக்கின்றனவென்பதும்,
சிவப்பு நிறமுடைய நட்சத்திரங்கள்
(Red Starts) க்ஷீண தசையை அடைந்திருக்கின்றனவென்பதும் வான நூலாசிரியர்களின் அனுபவத் துணிபாகும்.
இம்மாதிரி ஓரிடத்தில் உலகம் தோன்றியும் மற்றோர் இடத்தில் உலகம் அழிந்தும், சூரியர்கள் உற்பத்தியாகியும்,
பிறகு இறந்தும், இப்பிரபஞ்சம் எல்லையற்று இயங்கிக் கொண்டிருக்குமென்றால்,
பிரபஞ்சத்திற்கு ஆரம்பமுண்டோ? பிரபஞ்சம் எல்லையற்றதுமன்றி,
எப்பொழுதும் உள்ளது. ஆகையால் பிரபஞ்சத்திற்கு ஆரம்பமில்லை. அதாவது முதற் காரணமில்லை. ஒரு காரியத்திற்கு ஒரு காரணம் வேண்டுமானால், அதற்கு மற்றொரு காரணம் வேண்டும். இப்பிரபஞ்சம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதென்றால்,
கடவுள் என்பதன் காரணகாரிய இலக்கணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
கடவுள் தன்மையின் இலக்கணம், இன்னதென்றறியாது,
அதை மூலகாரணமாக மேற்கொள்வது முயற்கொம்புக்குப் பூண் கட்டுவது போலாகும். இன்னதென்றறியாவொன்றைக் காரணமாகவும், தான் தோன்றியென்றும் தவறுரையாடி இடர்ப்படுவதிலும் திருஷ்டாந்தமான பல அனுபவக் காரணங்களால் பிரபஞ்சம் தானாகவே தோன்றியிருக்கிறதென்பது மறுக்க முடியாத நியாயமாம்.
பிரபஞ்சம் அதாவது சடமும் சக்தியும் இல்லாத காலம் ஒன்று உண்டு என்று நிரூபிக்க முடியுமானால்,
அப்போதுதான் அதற்கு ஆரம்பமுண்டெனலாம்.
ஆனால்,
இப்பிரபஞ்சம் எல்லையுள்ளது. ஆகையால், ஆரம்ப முண்டென்பார்கள். இதற்கு நியாயம் பின்வருமாறு: எண்ணிறந்த நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தால்,
பகலில் எவ்வளவு வெளிச்சமிருக்கிறதோ அவ்வளவு வெளிச்சம் இரவிலும் இருக்கவேண்டும்.
அப்படி இல்லாததனால் பிரபஞ்சம் எல்லையுள்ளது என்று சிலர் நினைக்கிறார்கள்.
இது முற்றிலும் தவறாகும். இதற்குக் காரணங்கள் பல. (1) நட்சத்திரங்கள் வெகு கோடி மைல் தூரத்திலிருப்பதனால்,
அவைகளினுடைய பிரகாசம் மிகக் குறைவாய்க் காணப்படுகிறது.
(2) மேலும் (light is absorbed in its passage) வெளிச்சம் இருந்து பிறகு தணிந்துபோன (Dark Stars) இருள் நட்சத்திரங்களின் பேரில் அவ்வொளி பாய்ந்து சிதறுகின்றது. (3) வெளிச்சம் - ஈதர் (Ether) என்று சொல்லப்பட்ட நுண்ணணுக் கூட்டம் தன்னிடத்தே அடக்கிக் கொள்கின்றது.
(Abosorbed). (4) இதைத்தவிர நெபுலி (Nubulae) என்று சொல்லப்பட்ட அணுக் கூட்டங்களும் வெளிச்சத்தைக் கிரகிக்கின்றன. (Absorbed). இன்னோரன்ன பல காரணங்களால் நட்சத்திரங்களின் பேரொளி சிதறுண்டு சிற்றொளியாக மிளிர்கின்றது.
நூல் - மதமும் விஞ்ஞானமும்
ஆசிரியர் - கே.பிரம்மச்சாரி
Comments
Post a Comment