மதமும் விஞ்ஞானமும் - அத்தியாயம் – 1
அத்தியாயம் – 1
கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள சம்பந்தமே சமயமென்று சொல்லுவர் பலர். நீதி வழுவாமல் வாழ்வதே சமயமென்பர் சிலர். வேறுசிலர், மனிதன் முன்னேற்றத்திற்கும்,
நாகரிகத்திற்கும் உதவுகிறதெதுவோ, அதுவே சமயம் என்பர். ஆகையால், சமயமென்பதை இன்னதென்று வரம்பிட்டுத் திட்டமாகச் சொல்ல முடியாதிருந்ததால்,
பலர் பற்பல விதமாய் எழுதியிருக்கிறார்கள். சில பாஷைகளில் கடவுள் என்னும் பதமே காண்பதற்கில்லை. சமயங்களுள் கடவுட் கொள்கையில்லாச் சமயங்களும் இருக்கின்றன. எறும்பு முதல் யானை ஈராகவுள்ள ஜீவராசிகள் எல்லாம் தன்னைத் தான் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியுடையன வாயிருக்கின்றன. ஆபத்து நேர்ந்த காலத்து ஓருயிர் மற்ற உயிர்களைக் கொன்றாவது வஸ்துக்களை அழித்தாவது அவ்வாபத்தின்றித் தான் வாழ முயல்வது இயற்கை. மனித உற்பத்திக்கு முன்னேயே ஆகாயமும், சூரிய, சந்திர, நட்சத்திர வர்க்கங்களும் தோன்றியிருக்க வேண்டுமென்பது பவுதீக சாஸ்திரத்தின் துணிபு. மழையினாலும், மின்னலினாலும், இடியினாலும்,
வெள்ளத்தினாலும்,
மிருகங்களினாலும் உண்டாகும் இடையூறுகளையும்,
விபத்துகளையும் கண்டு மனிதன் பயமுற்று, இதற்குக் காரணம் யாதாகுமென யோசிக்கலானான்.
மனிதன் தூங்குங் காலத்தில் வேட்டையாடியதாகவும், விரோதிகளைக் கொன்றதாகவும், கொன்ற மாமிசத்தைப் பந்து மித்திரருடன் உண்டு களித்ததாகவும் கனவு கண்டமையாலும்,
தான் உண்மையாக வேறு இடங்களில் சஞ்சரிக்காததனாலும்,
விழித்தெழுந்த தனக்குள் ஒரு சூட்சுமமான சரீரம் இருக்கிறதென்றும், தூங்குங்காலத்தில் அச்சூட்சும தேகம் தன்னைவிட்டுப் பிரிந்து பல காரியங்களையும் செய்துவிட்டு, விழித்தெழுவதன் முன் மறுபடியும் தன்னை வந்து அடைகிறதென்றும் யோசித்தான். அந்த சூட்சும சரீரம் மிருகங்களிடத்தும்,
சலனமுடைய எல்லா வஸ்துக்களிடத்தும்,
சலனமற்ற வஸ்துக்களிடத்தும் இருப்பதனாலேதான் அவைகள் நமக்குத் தீங்கு விளைவிக்
கின்றனவென்று ஒருவாறு தீர்மானிக்கலானான்.
மனிதன் மூர்ச்சையடைந்து பிணம் போல் அசைவுற்றுப் பல மணிநேரம் அல்லது பலநாள் கழிந்த பிறகு மூர்ச்சை தெளிந்தெழுந்ததைக் கண்ட காட்டுமிராண்டியாகிய விவேக விர்த்தியற்றவன்,
தன்னுள்ளிருக்கும் ஆவி தன்னைவிட்டு நீங்கி, மறுபடியும் வந்து சேருகின்றதென்று தன் எண்ணத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டான். தூங்குகிறவனுக்கும் இறந்தவனுக்கும் அதிக வித்தியாசம் இல்லாமலிருப்பதால், தூங்குகிறவனுடைய
ஆவி செய்யும் காரியங்கள் கனவில் தெரிவது போல இறந்து போன பிறகும், அவனுடைய ஆவி அவன் வசித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்துகொண்டும் போய்க் கொண்டுமிருப்பதாக எண்ணினான். அவனைப் புதைத்த இடத்தைப் பிறகு கோயிலாக்கிக் கொண்டான்.
அந்த ஆவியைத் தெய்வமாகப் பாவிக்கலானான். அத்தெய்வங்களைத்
திருப்தி செய்யும் பொருட்டு மந்திரமும், தந்திரமும் ஏற்படுத்திக் கொண்டான். தான் செய்யும் காரியங்கள் சில, சரியான முடிவுக்கு வராததனால்,
தெய்வங்கள் தன்மீது கோபித்துக் கொண்டனவென்று நினைத்து, அவைகளைத் திருப்தி செய்ய ஆரம்பித்தான். பலியினாலும் ஆராதனையினாலும் தெய்வங்களுடைய கோபத்தை மாற்றவும், அருளைப்பெறவும் முடியுமென்று கருதினான். மேற்சொன்ன கற்பனா காரியங்களில் வல்லவர்களிற் சிலர் பிற்காலத்தில் பூசாரிகளாகவும், கோவிற் குருக்களாகவும் மாறிப் போனார்கள்.
இப்பூசாரிகள் புற்பூண்டு வகைகளின் குணங்களை அறிந்து மனிதருக்குண்டான சொற்ப வியாதியை நிவர்த்தி செய்ததனால் இவர்களிடத்தில் தெய்வ சக்தி இருப்பதாகப் பாமர ஜனங்கள் எண்ணி வந்தார்கள். இப்பூசாரிகளும் சுகமாக ஜீவிப்பதற்கும், ஜனங்களை ஏய்ப்பதற்கும் இது சுலப வழியென்றறிந்து தெய்வ இஷ்டத்தையும், அனுக்கிரகத்தையும் சாதாரண ஜனங்கள் எங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாமென்று சொல்லி ஏமாற்றி வந்தார்கள்.
ஆனால்,
நாள் செல்லச் செல்ல, மனிதன் தன்புலன்கள் எப்படி வேலை செய்கின்றனவென்றும்,
எப்படி ஏமாற்றுகின்றனவென்றும் தெரிந்து,
அவனைச் சுற்றிலுமுள்ள இயற்கைப் பொருள்களின் சம்பந்தா சம்பந்தங்கள் சிறுகச் சிறுகத் தெரிந்தன. இப்படியே கொஞ்சங் கொஞ்சமாக அறிவின் விருத்தியால் இயற்கையைத் தன் வசப்படுத்திக் கொண்டான். இயற்கையை ஜெயித்த காலத்தும்,
பிணி,
மூப்பு,
சாக்காடு என்னும் மூன்று விஷயங்கள் இவனை வருத்தின. மரணத்தைக் கண்டு மிகவும் நடுங்கினான்.
இவைகளை நீக்கி என்றும் அழியாதிருப்பதற்கே, பல சமயங்களையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஆகையால்,
சமயங்கள் தோன்றியதற்குக் காரணம் தெய்வங்களல்ல. மரணத்தையும், பிணியையும் ஜெயித்து நீண்ட வாழ்வும், நல் வாழ்வும் அடைவதற்கே சமயங்கள் தோன்றலாயின.
இறத்தல் ஜீவராசிகளின் இயற்கையென்று யாவரும் அறிந்திருக்கிறார்கள்.
மனிதர் தீராத நோயினால் பீடிக்கப்பட்டாலும் இறந்து போவதென்றால் மனங் கலங்குவார்கள். இறந்து போகும் தருணத்தில் இருக்கிறவர்களும் இன்னும் கொஞ்ச காலம் இருக்கமாட்டோமாவென்று பிரார்த்தித்திருக்கிறார்கள். நாட்டை வெறுத்துக் காட்டை விரும்பிப் போகத்தை விட்டு யோகத்தை நாடும் ஞானிகளும்,
ஆயுளை நீடிக்க வேண்டிய யோக சாதனத்தைக் கைக்கொள்ளுகிறார்கள். உலகம் மித்தை, உலகத்திலுள்ள பதார்த்தங்களும்,
பெண்டு பிள்ளைகளும் பொய்யென்று எல்லா வெறுத்தவர்களும்,
காலம் வருமுன்னே இறக்கச் சம்மதிப்பார்களோ? இல்லை இல்லை.
ஆகையால்,
உலகத்திலுள்ள ஜீவராசிகளெல்லாம் நீண்ட ஆயுளையே நாடுகின்றன.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால், நீண்ட நாள் நோயுடன் அவஸ்தைப்படுவதைவிட, சிறிதுநாள் நோயற்று வாழ்வதே உத்தமமாகும்.
பழுத்தும்,
தள்ளாதும்,
கண்கெட்டும்,
குருடாயும்,
கோலூன்றியும் இறப்பவர்களைப்பற்றித் துக்கிப்பது அவிவேகமாகும்..... ஆனால், இளமையாயிருந்தும் அநேக காலம் நோயுடன் போராடுவதும் மிகவும் துக்கத்தை விளைவிக்கும். ஆகவே, நீண்ட ஆயுளும் சுக வாழ்வும் பெறவே மதங்களை மக்கள் நிறுவினர்.
நாகரிகம் மேம்பட, ஆவியே ஆத்மாவாகவும்,
ஆத்மாவே தெய்வமாகவும் மாறிவிடுகின்றனவென்று சொன்னோம். அவைகளில் சில மனிதனுக்கு நன்மை செய்வதாகவும், சில தீமை செய்வதாகவும் மனிதன் எண்ணிக் கொள்கிறான்.
இவ்விருவித குணமுள்ள பற்பல தெய்வங்களுக்கு அதிபதியாகவும்,
சர்வ சக்தியுடையதாகவும் ஒரு பெரிய தெய்வம் அல்லது கடவுள் இருத்தல் வேண்டுமென்று அனுமானிக்கிறான். பிறகு இக்கடவுளையே பிரபஞ்சத்திற்கு மூலகாரணமாகவும்,
சிருஷ்டி கர்த்தாவாகவும் தீர்மானித்துக் கொள்ளுகிறான். அநேக நாள் சென்ற பிறகு மனிதன் தத்துவ ஆராய்ச்சியில் நுழைவது, நன்மை தீமை உண்டான விதத்தைப் பற்றியும்,
மனித உற்பத்தியைப் பற்றியும்,
அவர்கள் இறந்த பிறகு அடையும் கதியைப் பற்றியும் வினாவுகிறான்.
ஆரம்பத்தில் சமயத்திற்கும் சாஸ்திரங்களுக்கும் வித்தியாசமில்லை; இரண்டுமொன்றுபோல், இயற்கையைப்பற்றியே கூறுகின்றன.
இயற்கைப் பொருளையும், இயற்கைச் சக்தியையும் கண்டு மனிதன் பயந்தபிறகு, அவைகளை அறிந்து ஜெயித்து தன் வசப்படுத்திக்கொள்ள முயன்று கொண்டே வந்தான். இயற்கை சக்திகள் பிரிக்கப்படாமல் சடத்துடன் கலந்து இருக்கிறதென்று அறிந்து கொள்வதற்கும், அவைகள் ஒரே விதமாக நடிக்கின்றனவென்று அறிந்து கொள்வதற்கும் மனிதன் அதிக யுக்தியையும், அனுபவத்தையும் உபயோகிக்க வேண்டும். ஆகையால், சமயங்கள் ஏற்பட்ட பலவாண்டுகளுக்குப் பின்பே விஞ்ஞான சாஸ்திரங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
விஞ்ஞான சாஸ்திரங்களால் மனிதருடைய துக்கமும் துயரமும் நீங்குமானால், மதங்கள் எதற்கு?
என்னும் வினா எழலாம். ஆனால்,
விஞ்ஞான சாஸ்திரங்கள் ஆயுளை நீடிக்கும் வழியையுங் காட்டும். வியாதியைப் போக்கும் வழியைத் தெரிவிக்கும்.
ஆனால்,
அவைகள் மனிதனை நீதிமானாகச் செய்ய முடியாது. பலவித அரிய விஷத்தை ரசாயன சாஸ்திரிகள் செய்கிறார்கள். அவ்விஷமே மனிதனுடைய வியாதியைக் குணப்படுத்துவதற்கும்,
மனிதனைக் கொல்லுவதற்கும் ஏதுவாகும்.
ஆகையால்,
விஞ்ஞான சாஸ்திரம் ஒன்று மாத்திரம் மனிதனுடைய அன்பையும், தயையையும், பொறுமையையும், பரோபகாரத்தையும்
விருத்தி செய்ய இயலாது. ஆதலால்,
மதமும் வேண்டற்பாலதே. ஆனால், மதமென்பது மனிதன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக் கொண்ட, ஏதோ ஒரு பொருளற்ற கடவுளுக்கு அடிமை பூண்டு இடப்படுவதன்று என்பது இது ஒரு சாரார் கொள்கை.
மதங்கள் யூகம், அனுபவம், வசனம் என்னும் மூன்று ஆதாரங்களைக் கொண்டன. ஆனால், விஞ்ஞான சாஸ்திரம் யுக்தி, அனுபவம் என்னும் இரண்டு ஆதாரங்களைக் கொண்டது. ஒருவனுக்கு ஒரு வஸ்து கருப்பென்று தெரிந்தாலும், அது வெள்ளை நிறமுடையதென்று மத சாஸ்திரங்கள் சொல்லுமானால்,
மதவாதிகள் மத சாஸ்திரத்தைத்தான் கைக்கொள்ளுவார்கள்.
சிலர் சாஸ்திரமும், சமயங்களும் ஒரே கருத்தையே நாடுகின்றன.
இவ்விரண்டிற்கும் யாதொரு விரோதமுமில்லை என்பர். மதமென்பது மறு உலகத்தைப்பற்றியும், விஞ்ஞான சாஸ்திரங்கள் இவ்வுலகத்தைப் பற்றியும் கூறுகிறதானால்,
இவ்விரண்டிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று சிலர் நினைக்கின்றனர். மற்றுஞ் சிலர் இவ்விரண்டிற்கும் ஒவ்வாத விரோதமுண்டு. இவைகள் ஒரே விஷயத்தைப்பற்றி வேறு வேறாக வாதாடுகின்றன என்பார்கள். இது எப்படி இருப்பினும், விஞ்ஞான சாஸ்திரங்களும்,
சமயங்களும் எவ்வளவு ஒத்திருக்கின்றனவென்றும்,
எவ்வளவு விரோதமாகவிருக்கின்றதென்றும் பின்வரும் அதிகாரங்களில் சுருக்கமாகக் காண்போம்.
வேலையின்மைக்குக் காரணம்
இந்தியாவில் வருடமொன்றுக்குப் பதினாயிரக்கணக்கான பட்டதாரிகள் புதிது புதிதாகப் பெருகுகிறார்கள்.
இவர்கள் எல்லோருக்குமே உத்தியோகம்தான் வேண்டியிருக்கிறது. அதற்கெல்லாம் அரசாங்கத்தைத் தவிர, வேறு மார்க்கமில்லாமல் செய்து கொண்டார்கள்.
ஆகவே,
அரசாங்க உத்தியோகம் அதிகப்படுத்த வேண்டுமானாலும், அரசாங்கப் பெரும் பெரும் பதவி யாருக்காவது வேண்டுமானாலும் பாழும் தேசியத்தைத் தவிர வேறு வழியில்லை. கைத்தொழில் செய்வதென்றால் சில வகுப்புக்குப் பழக்கமில்லை. உரிமையில்லை. ஆகவே, பெரும்பாலும் உடலினால் பாடுபட முடியாத சோம்பேறிகளாலேயே உத்தியோகங்களை எதிர்பார்த்து இன்றைய தேசியம் தலைவிரித்தாடுகிறது. இதற்கும் இதுபோன்றவற்றுக்கும் இடம் கொடுத்துக்கொண்டே வந்தால்,
ஆட்சியின் இன்றைய முறை இன்னும் பலப்படத்தான் உதவுமே தவிர, அதை முழுவதும் நமது நன்மைக்கே அனுகூலமான ஆட்சியாக மாற்ற முடியாததாகிவிடும். சர்க்காரின் அடிமைகளாயிருந்து அவர்களுக்கு அனுகூலமான படியெல்லாம் ஆட்சியை நடத்திக் கொடுப்பது முதலில் ஒழிய வேண்டும்.
(03-08-1931 குடிஅரசு பக்கம் 9)
நூல் - மதமும் விஞ்ஞானமும்
ஆசிரியர் - கே.பிரம்மச்சாரி
Comments
Post a Comment